என். கே. மூர்த்தி பதில்கள்
தமிழ்நாடு சட்டமன்றம் எப்படி செயல்படுகிறது? – என்.கே.மூர்த்தி பதில்கள்
பச்சமுத்து – ஆரணி
கேள்வி- பாஜக தலைவர் அண்ணாமலை ரபேல் வாட்ச் பில் காட்டிவிட்டார். போதுமா?
பதில்– இந்த வாட்ச் நண்பர்கள் கொடுத்தது. இதற்கு பில் இல்லை என்று பிரச்சனையை கவுரமாக முடித்திருக்கலாம். அதைவிட்டுட்டு ஐந்து மாதம் கடந்து பில் என்ற பெயரில் ஒரு துண்டு சீட்டை நிருபர்களிடம் காட்டி தேவையற்ற விவாதத்திற்கு வழி ஏற்படுத்திக் கொண்டார். இப்போது வீட்டு வாடகை, காருக்கு பெட்ரோல் என்று எல்லாமே நண்பர்கள் கொடுத்து உதவுகிறார்கள் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அது எப்படி சார் எல்லாவற்றையும் நண்பர்கள் கொடுப்பார்கள்.
சாமிநாதன் – கள்ளகுறிச்சி
கேள்வி- கர்நாடகா பேரவை தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?
பதில்– ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதில் இருந்து கர்நாடகாவில் காங்கிரஸ் அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் பாஜகவில் சீட் கிடைக்காதவர்கள் காங்கிரஸ் கட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ்க்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் பொருத்திருந்து பார்ப்போம்.
நாகராஜ் – கொரட்டூர்
கேள்வி- ஆர் எஸ் எஸ் பேரணி குறித்து உங்கள் கருத்து?
பதில் – ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் பேரணி நடத்தலாம். ஆனால் மதரீதியாக வெறுப்பை விதைக்கும் செயல் ஆபத்தானது. அதில் இருந்து உருவாகும் வன்முறை அதைவிட ஆபத்தானது. அதுபோல் இல்லாமல் பேரணி நடத்துவது தவறில்லை. இதில் தமிழக அரசு எந்த அளவிற்கு கவனமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு நல்லது.
புவனேஸ்வரன் – அம்பத்தூர்
கேள்வி – ராகுல் காந்தி, கெஜ்ரிவால் போன்ற தலைவர்களை பாஜக அரசு மிரட்டி வருகிறது. ஆனால் ஸ்டாலினை ஒன்றும் செய்யவில்லையே?
பதில்– பொருத்திருந்து பாருங்கள்! திமுகவில் இருக்கும் ஒரு அமைச்சர் விரைவில் எல்லோருக்கும் மின்சாரத்தைவிட கூடுதலான ஷாக் கொடுக்கப்போகிறார். அவர் சுமார் 40 எம்எல்ஏ வுக்கு மது மூலமாக வரும் கரன்சியால் குளிப்பாட்டி வைத்துள்ளதாக தகவல்கள் வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அந்த அமைச்சர் தனது விளையாட்டை ஆரம்பிக்கலாம் என்று உளவுத்துறை கணித்திருக்கிறது.
விவேகன் – திருமுல்லைவாயில்
கேள்வி – அரசியலில் உங்களுக்கு பிடித்த தலைவர் யார்? பிடிக்காத தலைவர் யார்?
பதில்– எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்காத தலைவரே இல்லை. எல்லோரையும் பிடிக்கும். அவர்களின் அரசியல் செயல்பாடுகளை வைத்து தான் மதிப்பிடுகிறோம்.
நாட்டிற்கு தேவையான சமத்துவத்தை போதிக்கின்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பிடிக்கும். வெறுப்பு அரசியலை விதைக்கும் பாஜக தலைவர்கள், சீமான் போன்றவர்களை மக்கள் வெறுக்கிறார்கள். நானும் வெறுக்கிறேன்.
பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு ஒழுக்கம் இருக்க வேண்டும். அதை கடைபிடிக்கின்ற தலைவர்களை நான் நேசிக்கின்றேன்.
சம்சுதீன் – ஆவடி
கேள்வி- தமிழ்நாடு சட்டமன்றம் எப்படி செயல்படுகிறது?
பதில்– முதலமைச்சர் ஸ்டாலினின் சட்டசபை நடவடிக்கையை பாராட்டியே ஆகவேண்டும். தமிழர் நலனுக்கு எதிராக ஆளுநர் செயல்படும் போதெல்லாம் முதலமைச்சர் மிக அழகாகவும், அறிவு பூர்வமாகவும் நடந்து கொள்கிறார்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு ஆதரவாக ஆளுநர் செயல்படுகிறார். அதனை கண்டித்து ஆளுநருக்கு எதிரான தனி தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. ஆனால் முக்கிய எதிர்கட்சி அதிமுக ஆக்கப்பூர்வமாக செயல்படாமல் ஓபிஎஸ் தொடர்பான இருக்கை விவகாரத்திற்காக வெளிநடப்பு செய்துவிட்டனர். எடப்பாடி பழனிச்சாமி எதிர்கட்சி தலைவராக செயல்படவில்லை.
மேலும் ஆளும்கட்சியை சேர்ந்த சில அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலினை புகழ்பாடுவதை ரசிக்க முடியவில்லை.
ராமதாஸ் – பட்டாபிராம்
கேள்வி – ராகுல்காந்தி மன்னிப்பு கேட்பாரா? சிறைக்கு செல்வாரா?
பதில் – மன்னிப்பு கேட்பதற்கு “நான் சாவர்கர் பரம்பரை அல்ல”, நான் காந்தி பரம்பரை என்று அழுத்தமாக கூறிவிட்டார். அவருடைய துணிச்சலை இளைஞர்கள் கொண்டாடுகிறார்கள்.
தனசேகர் – ஆவடி
கேள்வி- பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொல்லியிருக்கிறார். அது தவறு இல்லையா?
பதில்– இராமாயணத்தில், மகாபாரதத்தில், கந்தபுராணத்தில், பெரியபுராணத்தில் பக்தி என்ற பெயரில் ஆரியர்களின் கருத்துகள் உள்ளே புகுத்தப்பட்டுள்ளது. எவனோ காட்டு மிராண்டி காலத்தில் எழுதப்பட்டதை இன்றும் கொண்டாடுவதை கண்டித்தார்.
உனது மொழியில் ஆரியம் புகுந்துவிட்டது, உனது இலக்கியத்தில் ஆரியம் புகுந்துவிட்டது. உனது பண்பாட்டில் ஆரியம் புகுந்துவிட்டது. உனது வாழ்க்கையில் ஆரியம் புகுந்துவிட்டது. உனது கல்வியில் ஆரியம் புகுந்துவிட்டது. உணவு, உடை, பழக்கவழக்கங்களில் ஆரியம் புகுந்துவிட்டது. எனவே ஆரியக் கலப்படம் இல்லாத ஏதாகிலும் உன் மொழியில் இருக்கிறதா? என்று பெரியார் கேட்டார்.
தமிழுக்கு பெரியார் செய்தது போல் வேறு எந்த தலைவரும் செய்ததில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
விமல் – சங்கராபுரம்
கேள்வி- எவ்வளவு போராடியும் வாழ்க்கையில் வெற்றிபெற முடியவில்லை. சோர்வு ஏற்படுகிறது என்ன செய்யலாம்?
பதில் – வெற்றி என்பது என்ன என்று தீர்மானிக்க வேண்டும். வெற்றிக்கு அளவு இல்லை. எல்லை இல்லை. ஒருவருக்கு வயிறு நிறைய உணவு கிடைத்தால் அதுவே வெற்றி. ஆனால் இன்னொருவருக்கு நாடே கிடைத்தாலும் போதவில்லை. அதனால், முதலில் எது வெற்றி என்பதை தீர்மானிக்க வேண்டும்.
என்னை பொருத்தவரை வெற்றி என்பது நான் அடையும் மகிழ்ச்சியில் இருக்கிறது. “நான் ஒவ்வொரு நாளையும் அறுவடைக்கான நாளாக நினைப்பதே இல்லை. ஒவ்வொரு நாளும் விதைப்பதற்கான நாளாகவே எடுத்துக் கொள்கிறேன். அப்படியே வாழ்கிறேன்”.
கோபால் – கோவை
கேள்வி- டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவாரா?
பதில்– மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்வர் சிசோடியா பிப்ரவரி 26 ல் கைது செய்யப்பட்டார். அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை என்ற பெயரில் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பேச்சு வார்த்தை நடத்தியது. அதற்கு சிசோடியா பணியவில்லை. அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சட்டமன்றத்தில் அதானி விவகாரம் குறித்து பேசினார். அவரையும் விசாரணை வலையத்திற்குள் கொண்டுவந்து விட்டார்கள். அதானி தொடர்பாக யார் கேள்வி எழுப்பினாலும் அது நாட்டிற்கு எதிராக எழுப்பப்படும் கேள்வி. அவர்களை அமலாக்கத்துறை இப்படி தான் செய்யும்.
அன்புள்ள APC NEW TAMIL வாசகர்களுக்கு வணக்கம். மேலும், இதில் இடம் பெறுகின்ற கேள்விகளில் முக்கியமான மூன்று கேள்விகள் தேர்வு செய்து அதில் முதல் கேள்விக்கு ரூபாய். 500, இரண்டாவது கேள்விக்கு ரூபாய். 250 மற்றும் மூன்றாவது கேள்விக்கு ரூபாய். 100 பரிசுகள் வழங்கப்படும். உங்கள் கேள்விகள் அனுப்ப வேண்டிய வாட்ஸப் எண்#. 9176541031 |