இந்தியாவில் தேர்தல் முறை வரும் காலக்கட்டத்தில் எப்படி இருக்கும்?
என்.கே.மூர்த்தி பதில்கள்
ராஜாராம் – ஆவடி
கேள்வி – நடிகர் விஜய் புதியதாக கட்சி தொடங்கி இருப்பதைப் பற்றி?
பதில் : நடிகர் விஜய் என்பவர் படிப்படியாக வளர்ந்து தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கட்சி தலைவராக உயர்ந்திருக்கிறார். அவருடை அறிக்கையில் ஊழலுக்கு எதிராகவும், சாதி, மத வெறுப்பு அரசியலுக்கு எதிராகவும் “தமிழக வெற்றி கழகம்” என்ற கட்சியை தொடங்கி இருப்பதாக கூறியிருக்கிறார். அவருடைய நோக்கத்தை வரவேற்கிறேன்.
அரசியல் பயணம் என்பது மிகவும் கடினமானது.. இன்னும் இரண்டு ஆண்டு காலம் அவர் செயல்படும் விதம், எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியை வைத்துதான் அவர் வெற்றியை தீர்மானிக்க முடியும். அதுவரை பொறுமையாக கவனிப்போம்.
ராமதாஸ் – பாடி
கேள்வி – தனிநாடு கோரிக்கையை அண்ணா கைவிட காரணம் என்ன?
பதில் : அப்பொழுது இருந்த பிரதமர் நேரு பிரிவினை வாத தடுப்பு சட்டத்தை கொண்டு வந்தார். இந்தியாவில் பிரிவினை கோரும் இயக்கம், கட்சியை முடக்கவும், அவர்கள் மீது தேசவிரோத வழக்கு பதிந்து தேர்தலில் நிற்க விடாமல் தடுக்கவும் அந்த சட்டம் இயற்றப்பட்டது. அண்ணாவை குறிவைத்தே அந்த சட்டம் கொண்டுவந்தனர்.
அப்பொழுது ஒன்று திராவிட நாடு கோரிக்கையை கைவிட வேண்டும் அல்லது திமுக முடக்கப்படுவதை வேடிக்கை பார்க்க வேண்டும். இது அண்ணாவிற்கு கொடுக்கப்பட்ட நெருக்கடி. அந்த சூழ்நிலையில் திமுக என்ற மாபெரும் இயக்கத்தை பாதுகாத்துக் கொண்டு “திராவிட நாடு” கோரிக்கையை கைவிட்டார்.
அன்பரசு – அலமாதி
கேள்வி – இந்தியாவில் தேர்தல் முறை வரும் காலக்கட்டத்தில் எப்படி இருக்கும்?
பதில் : கடந்த மாதம் 30ம் தேதி பஞ்சாப், அரியானா மாநிலங்களின் தலைநகர் “சண்டிகரில்” மேயர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. அது கவுன்சிலர்கள் வாக்களிக்கும் தேர்தல். அதில் பாஜக வேட்பாளர் மனோஜ்சோங்கர் என்பவர் 16 வாக்குகளையும், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் குல்தீப் குமார் 20 வாக்குகளையும் பெற்றனர். ஆனால் 16 வாக்குகளை மட்டும் பெற்ற பாஜக வேட்பாளர் மனோஜ்சோங்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
அந்த தேர்தலில் தேர்தல் ஆணையராக இருந்தவர் எதிர் கட்சிக்கு போடபட்ட 8 வாக்குகளை அவரே திருத்தி செல்லாத வாக்குகள் என்று அறிவித்து விட்டு புறவாசல் வழியாக சென்றுள்ளார். இந்தியாவில் இனிமேல் தேர்தல் இப்படித்தான் நடைபெறும்.
பகத்சிங் – செங்குன்றம்
கேள்வி – கர்நாடகாவில் ஒரு எம்பி தென்னிந்தியாவில் தனி நாடு கோரிக்கை எழும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளாரே?
பதில் : கர்நாடகா மாநிலத்தின் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரின் தம்பி டி.கே. சுரேஷ், தென்னிந்திய மாநிலங்களின் நிதியை இந்தி பேசும் வட இந்திய மாநிலங்களுக்கு மத்திய அரசு பிரித்து கொடுப்பதாகவும், இதேநிலை நீடித்தால் தென்னிந்திய மாநிலங்கள் பிரிந்து தனிநாடு கோரிக்கையை வைக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் பேசியுள்ளார்.
அதாவது தென்னிந்திய மாநிலங்களுக்கு தரவேண்டிய, கட்டாயமாக கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்காமல், மாநில அரசுகளை வஞ்சித்தால் வேறு வழியில்லாமல் தனிநாடு கோரிக்கையை முன் வைப்போம் என்று பேசியிருக்கிறார். இதில் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை.
போதிய நிதி தரவில்லை என்று மத்திய அரசை கண்டித்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி போராட்டம் நடத்தி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் தந்தை பெரியார் 1938ல் “தமிழ்நாடு தமிழருக்கே” என்றும் அதனை தொடந்து அடைந்தால் ”திராவிட நாடு, இல்லையென்றால் சுடுகாடு ” என்றும் அண்ணா வலியுறுத்தினார். அந்த குரல் தற்போது கர்நாடகாவில் இருந்து எழுந்துள்ளது.
தேசிங்கு – திருவள்ளூர்
கேள்வி – உங்களுக்கு பிடித்த அரசியல் கட்சி எது?
பதில் : எனக்கு தெரிந்த பீர்பால் கதை ஒன்றை சொல்கிறேன்… அதையே பதிலாக எடுத்துக் கொள்ளுங்கள்.
தெனாலிராமன் அரசவை பணியில் இருந்தபோது சோர்வடைந்து தூங்கி விழுந்தார். அப்பொழுது மற்ற அமைச்சர்கள் தெனாலிராமனுக்கு வயதாகிவிட்டது. அவருக்கு ஓய்வு கொடுத்து விடலாம் என்றார்கள்.
அப்பொழுது அரசர், என் மனதில் ஒரு கேள்வி இருக்கிறது. அதற்கு விடை கொடுத்து விட்டால் தெனாலிராமனுக்கு ஓய்வு கொடுத்து விடலாம் என்றார்.
உலகிலேயே வெண்மையானது எது? இதற்கு பதில் சொல்லுங்கள் என்றார் அரசர்.
ஒரு அமைச்சர் “வெள்ளி” பொருட்கள் என்றார். இன்னொருவர் “பால்” என்றார். வேறு சிலர் “மல்லிகை பூ ” என்றார்கள், சுண்ணாம்பு தான் வெண்மை என்றார்கள்.
ஆனால் அரசர் திருப்தி அடையவில்லை. தெனாலிராமனிடம் கேட்டார்.
தென்னாலிராமன் கொஞ்சம் வெள்ளி பொருட்கள், பால், மல்லிகை பூ, சுண்ணாம்பு ஆகிய பொருட்களை வரவழைத்தார். அந்த பொருட்களை ஒரு பெரிய அறையில் தரை விரிப்பின் மீது வைத்து கதவுகளையும், சன்னல்களையும் பூட்டி திரையிட்டார்.
அரசே, இவர்கள் உள்ளே சென்று அவரவர் கூறிய வெண்மை பொருட்களை எடுத்து வரச்சொல்லுங்கள் என்றார்.
அனைவரும் அறைக்குள் சென்றார்கள். உள்ளே இருட்டாக இருந்தது. மல்லிகை பூவை மிதித்து கசக்கினார் கள், பால் பாத்திரம் காலில் இடறி பாலை கொட்டினார்கள், சிலருக்கு வெள்ளி பொருட்கள் காலில் பட்டு குத்தியது, சுண்ணாம்பையும் தரையில் கொட்டி விட்டார்கள். அப்பொழுது இருட்டில் இருந்த அமைச்சர்கள் ஒருவரை ஒருவர் தெரியாமல் இடித்துக் கொண்டனர். ஒருவராலும் அவர்கள் கூறிய வெண்மை பொருட்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
அதேநேரத்தில் தெனாலிராமன் அறையின் மேற்புறத்தில் இருந்த கதவை திறந்தார். ஒளி பிரகாசமாக வீசியது. அறையில் இருந்த பொருட்கள் தெரிந்தது.
அப்பொழுது அரசர் அந்த இடத்திற்கு வந்தார்.
அரசே, உலகில் வெண்மையானது பாலோ, மலரோ, வெள்ளி பொருட்களோ அல்லது சுண்ணாம்போ இல்லை. அப்படி இருந்திருந்தால் இருட்டறையில் அந்த பொருட்கள் பளிச்சென்று தெரிந்திருக்கும். உலகிலேயே வெண்மையானது “சூரியனின் ஒளி” மட்டுமே என்றார். சூரியனை வைத்துதான் மற்ற எல்லா பொருட்களும் பிரகாசமாக தெரிகிறது என்றார். அரசர் அதை ஏற்றுக்கொண்டு தெனாலியை அணைத்துக் கொண்டார். இதுவே உங்கள் கேள்விக்கான விடை.
அன்புள்ள APCNEWSTAMIL வாசகர்களுக்கு வணக்கம். வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமை கேள்வி- பதில் இடம்பெறுகிறது. இதில் உங்கள் கேள்விகளும் இடம் பெற வேண்டும் என்று ஆசிரியர் குழு விரும்புகிறது. மேலும், இதில் இடம் பெறுகின்ற கேள்விகளில் முக்கியமான மூன்று கேள்விகள் தேர்வு செய்து அதில் முதல் கேள்விக்கு ரூபாய். 500, இரண்டாவது கேள்விக்கு ரூபாய். 250 மற்றும் மூன்றாவது கேள்விக்கு ரூபாய். 100 பரிசுகள் வழங்கப்படும். உங்கள் கேள்விகள் அனுப்ப வேண்டிய வாட்ஸப் எண்# 9176541031 |