Homeசெய்திகள்கேள்வி & பதில்பாஜக - அதிமுக கூட்டணி மீண்டும் மலருமா? என்.கே.மூர்த்தி பதில்கள்

பாஜக – அதிமுக கூட்டணி மீண்டும் மலருமா? என்.கே.மூர்த்தி பதில்கள்

-

இந்தியா - நாட்டுப்பற்று

பாஜக – அதிமுக கூட்டணி மீண்டும் மலருமா? – என்.கே.மூர்த்தி பதில்கள்

சுப்ரமணியன்- கள்ளக்குறிச்சி
கேள்வி – நமக்கு தேவை நாட்டுப்பற்றா? மதப்பற்றா?

பதில் – நாடு முக்கியமா? மதம் முக்கியமா என்று கேட்டால் நாடுதான் முக்கியம். அரசியல் கட்சிகளும் நாட்டை மையப்படுத்தி, நாட்டு மக்களின் நலனை மையப்படுத்தி அரசியல் செய்ய வேண்டும். அப்பொழுதான் அந்த நாடு ஆரோக்கியமாக இருக்கும். ஒரு வேளை கட்சிகள் மதத்தை மையப்படுத்தி அரசியல் செய்தாலும் அதை மக்கள் ஆதரித்தாலும் அந்த நாடு மிகவும் பாதிக்கப்படும். கலவர பூமியாக மாறும். பொருளாதாரத்தில் பின் தங்கி மக்கள் பசி, பட்டினியால் தவிப்பார்கள். மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் நடைபெறும். இந்தியா அதை நோக்கிதான் போய் கொண்டு இருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தல்

கண்ணப்பன்- மலேசியா
கேள்வி-இந்தியாவில் வரும் நாடாளுமன்ற தேர்தல் எப்படி இருக்கும்?

பதில் – மின்னணு வாக்கு இயந்திரத்தை பொதுத்துறையை சேர்ந்த பெல் நிறுவனம் தயாரிக்கிறது. அந்த நிறுவனத்தில் பாஜகவை சேர்ந்தவர்களும், பாஜகவால் நியமனம் செய்யப்பட்ட நான்கு பேர் இயக்குனர்களாக உள்ளனர். இந்த நிலையில் வாக்கு இயந்திரம் பாதுகாப்பானதாக இருக்குமா? ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்குமா என்று மத்திய அரசின் முன்னாள் செயலாளர் ஈ.ஏ.எஸ். சர்மா என்பவர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுக - பாஜக

ரங்கநாதன் – அரியலூர்
கேள்வி- பாஜக – அதிமுக கூட்டணி மீண்டும் மலருமா?

பதில்- மகாராஷ்டிரா மாநிலத்தில் நீண்ட காலமாக சிவசேனா – பாஜக கூட்டணி இருந்தது. தற்போது சிவசேனா என்ற கட்சியை உடைத்து பாஜக கைப்பற்றிக் கொண்டது. இப்படி பல உதாரணங்கள் இருப்பது அதிமுக தலைமைக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை.

பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்தால் இன்னும் ஐந்து ஆண்டுகளில் அதிமுக என்ற ஒரு அரசியல் கட்சியே இருக்காது. கூட்டணியில் சேராவிட்டால் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பாஜகவில் சேரவேண்டும் அல்லது சிறைக்கு செல்ல வேண்டும். எது சாதகமானது என்பதை அதிமுக முடிவு செய்ய வேண்டிய காலம் நெருங்கி விட்டது.

பக்தி

சுந்தர் – சின்மாய நகர்

கேள்வி- இந்துக்கள் எல்லோரும் பாஜகவிற்கு ஆதரவு தெரிவிப்பார்களா?

பதில் – ஒரு பழமொழியை படித்தேன்… அதை உங்களிடம் பகிர்ந்து கொள்வது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

மரங்கள் வெட்டப்படுகிறது. காடுகள் அழிந்து வருகிறது. ஆனாலும்
மரங்கள் மீண்டும் மீண்டும் கோடாரிக்கே வாக்களித்து வருகிறது.

கோடாரியில் உள்ள கைப்பிடியை காட்டி கோடாரி சொன்னது “நான் உங்களில் ஒருவன்” என்று …
கோடாரி சொன்னதை மரங்கள் முழுமையாக நம்பியது…
மனதார நம்பியது..
கோடாரி யார் என்று உங்களுக்கு புரிந்ததா?

சனாதனம்

திருப்பதிராஜா– திருவண்ணாமலை
கேள்வி – சனாதனம் என்றால் என்ன?

பதில் – சனாதனம் என்பது இந்துக்களின் நம்பிக்கை இல்லை. சிவனை நம்புவது, திருமாலை நம்புவது, ஐயப்பனை நம்புவது, திருப்பதி ஏழுமலையானை நம்புவது, துர்க்கை அம்மனை நம்புவது, காளியை நம்புவது, குலதெய்வ வழிப்பாட்டை நம்புவது, அதன் அடிப்படையில் புராணங்களை நம்புவது, இதிகாசங்களை நம்புவது, அதன் கதைகளை நம்புவது, சடங்குகளை, சாஸ்திரங்களை நம்புவது என்று இது அனைத்தும் இந்துக்களின் நம்பிக்கைகள், இந்து சமயத்தைப் பின்பற்றும் மக்களின் ஆன்மீக நம்பிக்கைகள். இது சனாதனம் அல்ல. “சனாதனம் என்பது நிலையானது.” எது நிலையானது? “பிறப்பின் அடிப்படையிலான பாகுபாடு நிலையானது என்பதுதான் சனாதனம்.”

பிறப்பின் அடிப்படையில் பார்ப்பனர்களே உயர்ந்தவர்கள். மற்ற அனைத்து வர்ணத்தை சேர்ந்தவர்களும் தாழ்ந்தவர்கள். இதுதான் சனாதனம்.

ஆணாக பிறந்ததனால் அவன் உயர்ந்தவன், பெண்ணாகப் பிறந்ததனால் அவள் தாழ்ந்தவள். பிறப்பின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு பார்ப்பதுதான் சனாதனம். இந்த ஏற்றத்தாழ்வுகள் வேறெந்த மதத்திலும் கிடையாது. அதேபோன்று தீட்டு கொள்கை வெறெந்த மதத்திலும் கிடையாது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் தீட்டு. தலித் மக்கள் தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு, நெருங்கினால் தீட்டு என்பதுதான் சனாதனம். மேலும் ஒரே மதத்தில், ஒரே சாதியில் அகமண முறைப் பார்த்து திருமணம் செய்ய வேண்டும். அதை மீறி திருமணம் செய்தால் ஆணவக் கொலை செய்வதுதான் சனாதனம்.

MUST READ