புதிய நாடாளுமன்றம் திறப்பிற்கு எதிர்கட்சி புறக்கணிப்பு சரியா?
என். கே. மூர்த்தி பதில்கள்
கர்ணன்- கள்ளக்குறிச்சி
கேள்வி -ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பற்றி?
பதில் – அபூர்வ மனிதர். ஐந்துமுறை ஒடிசா முதலமைச்சராக இருந்து வரும் நவீன் பட்நாயக் பாரம்பரியம் மிகுந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். அப்பழுக்கற்ற நேர்மையாளர். அரசியல் வாழ்க்கையில் ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமானவர். தனக்கு 52 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்து இருப்பதாக பொது தளத்தில் பதிவிட்டு அரசியல் வாதிகளுக்கெல்லாம் வழிகாட்டியாக இருப்பவர்.
தாவூத் – ஆவடி
கேள்வி- மோடி முயற்சியினால் ரஷ்யா- உக்ரைன் போர் முடிவிற்கு வருமா?
பதில் – அப்படி நடந்தால் மகிழ்ச்சி தான். உலகம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் வன்முறையாளர்களாக இருக்கிறார்கள். வன்முறையை விதைக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். உலகில் அன்பை விதைக்கக் கூடிய தலைவர்கள், அனைத்து பிரிவு மக்களிடமும் அன்பு செலுத்தும் தலைவர்கள் ஒருவரும் இல்லை.
தன் குழந்தைகளிடம் அன்பை காட்டும் மனிதர், இன்னொருவர் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஆயுதத்தை தயாரிக்கும் வரை போர் முடிவிற்கு வராது.
வரதராஜ் – அயனாவரம்
கேள்வி – காந்தியின் சிலையை மோடி திறந்து வைத்திருக்கிறாரே?
பதில் – ஜப்பான் நாட்டில் ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்திருக்கிறார்.
பிரதமர் நரேந்தர மோடி ஆட்சிக்கு வந்து பத்தாண்டுகள் முடியப் போகிறது. காந்தியின் சிலையை அவர் இந்தியாவில் ஒரு இடத்தில் கூட திறந்ததாக தகவல் இல்லை. அதை நமது நாட்டில் செய்திருந்தார் என்றால் அவர் மீது மரியாதை மேலும் அதிகரித்திருக்கும்.
இந்தியாவில் பிறந்த பத்தரின் அருமை சீனா, ஜப்பான் நாடுகளுக்கு தெரிந்திருப்பதைப் போன்று காந்தியின் அருமை ஜப்பான் நாட்டின் அரசுக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் இந்தியாவிற்கு தெரியவில்லை என்பதுதான் வேதனை.
சுபாஷ் – திருச்சி
கேள்வி – தமிழீழம் மலருமா?
பதில் – கடந்த ஆண்டு கனடா நாட்டில் இலங்கை அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். இலங்கையில் தமிழீழம் அமைவது தான் அமைதிக்கான சிறந்த வழி. உலகம் முழுவதும் பொது வாக்கெடுப்பு நடத்தி தீர்வு காண்பது நல்லது.
அரசு – காமராஜர்நகர்
கேள்வி – ஆவடி அரசியல் பற்றி உங்கள் பார்வை?
பதில் – ஆவடி அமைதியாக இருக்கிறது. அரசியல் களம் வெற்றிடமாக இருக்கிறது. யாராகிலும், எந்த வடிவத்திலாவது தலைமைப் பண்பு ஏற்க, வழிநடத்த தலைமை பண்பு உள்ள ஒழுக்கமான இளைஞர்கள் வரமாட்டார்களா என்று ஆவடி ஏங்குகிறது.
முருகன் – விழுப்புரம்
கேள்வி – தலைவருக்கும் முதலாளிக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
பதில் – தலைவர்- மக்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தக் கூடியவர். அதற்காக தனது வாழ்க்கையை அற்பனிக்கக் கூடியவர்.
முதலாளி – மக்களுடைய அறியாமையை பயன்படுத்தி தன்னுடைய கஜானாவை நிரப்பிக் கொள்ளக்கூடியவர். தன்னை தன் வளர்ச்சியைப் பற்றி மட்டும் சிந்திக்கக் கூடியவர்.
ராமு – அம்பத்தூர்
கேள்வி – புதிய நாடாளுமன்றம் திறப்பிற்கு எதிர்கட்சி புறக்கணிப்பு சரியா?
பதில் – அரசாங்கத்திற்கும் அரசியல் கட்சிக்கும் வேறுபாடுகள் இருக்கிறது. மக்கள் அரசாங்கத்தை வழிநடத்த ஒரு அரசியல் கட்சிக்கு அங்கீகாரம் வழங்குகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிகள் அரசாங்கத்தை தங்களுடைய கட்சியை வழிநடத்துவதை போன்று அரசாங்கத்தை இயக்குகிறார்கள். அதுதான் பிரச்சனை.
இந்திய மக்களின் பெருமைக்குறியவர் முதல் உறுப்பினர் குடியரசு தலைவர். அவருக்கு மட்டுமே நாடாளுமன்றத்தை கூட்டவும், கலைக்கவும் முழு அதிகாரம் அவருக்கே இருக்கிறது. இந்த நிலையில் புதியதாக கட்டப்பட்டு திறக்கப்படும் நாடாளுமன்ற கட்டிடத் திறப்புவிழா நிகழ்ச்சியில் குடியரசு தலைவரை அழைத்து கௌரவிக்கவில்லை. அவருக்கு அழைப்பிதழ் கூட கொடுக்கப்பட வில்லை என்பதை எந்த ஜனநாயக வாதிகளும் ஏற்கமாட்டார்கள்.
ஒரு நாட்டின் முதல் குடிமகனை அவமதிப்பது என்பது ஒட்டுமொத்த மக்களையும் அவமதிப்பதற்கு சமம். அதனால் எதிர்கட்சிகள் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பு செய்துள்ளது.
சார்லஸ் – போரூர்
கேள்வி – இந்தியா பட்டினி தேசமா?
பதில் – இந்தியாவில் தினமும் 22 கோடி பேர் பட்டினியாக உறங்குகிறார்கள். உலகில் நாள் தோறும் 80 கோடி பேர் பசியோடு உறங்குகிறார்கள். ஆனால் ஆண்டிற்கு 70 மில்லியன் டன் உணவு பொருட்கள் வீணாக அழிக்கப்படுகிறது. இந்த கொடுமையை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
கடந்த 2022 ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி பட்டினி அதிகம் உள்ள நாடுகளில் ஏமன் முதலிடத்திலும் இந்தியா 107வது இடத்தில் உள்ளது.
மாரிமுத்து – வண்டலூர்
கேள்வி – பிரதமர் கூட்டிய நிதி ஆயோக் கூட்டத்தை எதிர்கட்சி முதல்வர்கள் புறக்கணிப்பு செய்துள்ளதைப் பற்றி?
பதில்- ஜனநாயகம், கூட்டுறவு, கூட்டாச்சி தத்துவம் எல்லாம் கேலிக்கூத்தாக ஆக்கப்படுகிறது. இதில் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதில் என்ன பயனடையப் போகிறது என்று டெல்லி முதல்வர் அரவிந் கெஜ்ரவால் தெரிவித்துள்ளார்
அன்புள்ள APCNEWSTAMIL வாசகர்களுக்கு வணக்கம். வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமை கேள்வி- பதில் இடம்பெறுகிறது. இதில் உங்கள் கேள்விகளும் இடம் பெற வேண்டும் என்று ஆசிரியர் குழு விரும்புகிறது. மேலும், இதில் இடம் பெறுகின்ற கேள்விகளில் முக்கியமான மூன்று கேள்விகள் தேர்வு செய்து அதில் முதல் கேள்விக்கு ரூபாய். 500, இரண்டாவது கேள்விக்கு ரூபாய். 250 மற்றும் மூன்றாவது கேள்விக்கு ரூபாய். 100 பரிசுகள் வழங்கப்படும். உங்கள் கேள்விகள் அனுப்ப வேண்டிய வாட்ஸப் எண்#. 9176541031 |