பிரித்வி ராஜா , பாலப்பட்டு
கேள்வி- சரியான பட்டிக்காட்டான் என்று எல்லோரும் என்னை கிண்டல் செய்கிறார்கள்… என்ன செய்யலாம்?
பதில்: பட்டணத்தில் படித்தவன் ஒரு வாலிபன் பட்டிக்காட்டுக்கு போனான். ஒரு பெரியவர்கிட்டே ஏங்க அரசம்பட்டுக்கு எந்த வழியா போகனும் என்று கேட்டான். அந்த ரோடு வழியா போகனும் தம்பின்னு வழி காண்பித்தார். அந்த ஊருக்கு போக எவ்வளவு நேரமாகும்னு பட்டணத்து தம்பி கேட்டாரு, அதற்கு பெரியவர் பேசாம நடந்து போ… ன்னாரு.
அரசம்பட்டுக்கு போக எவ்வளவு நேரமாகும்னு கேட்டேன்… அதான் பேசாம நடந்து போ..ன்னு சொல்றேன்ல!
அந்த தம்பியும் பேசாம பதினைந்து இருபதடி தூரம் நடந்தார். பெரியவர் இப்ப, தம்பியை கூப்பிட்டு, தம்பி நீ அரசம்பட்டு போக முக்கால் மணி நேரமாகும்பா என்றார். அந்த தம்பி எரிச்சலடைந்து ஏய்யா, நீ என்ன பைத்தியமா? முக்கால் மணி நேரம் ஆகுமுன்னு முதல்லயே சொல்ல வேண்டியதுதானே? ன்னு கேட்டார்.
அதற்கு பெரியவர், அது எப்படிப்பா சொல்றது? நீ என்ன வேகத்தில் நடக்கறேன்னு பார்க்கத்தான் முதல்ல பேசாம நடன்னேன்… கொஞ்சம் நடந்ததும் உன் வேகம் புரிஞ்சு, முக்கால் மணி’ன்னு சொன்னேன். முதல்லேயே ஏன் சொல்லலை?ன்னு நீ முட்டாள் தனமா கேள்வி கேட்டுட்டு, என்னை பைத்தியம்ங்கறே’ன்னாரு.
இப்ப சொல்லுங்க யார் பட்டிக்காட்டான்.
சதீஷ், ஆவடி
கேள்வி- காவல்துறை வேலை நிறுத்தம் செய்தால் எப்படி இருக்கும்?
பதில்: “மாமுல்” வாழ்க்கை பாதிக்கும்.