திராவிட இயக்கத்தை அழிப்பதற்கான பாஜகவின் முயற்சிகள் தோல்வி அடைந்துவிட்டதால், தற்போது சீமானை கையில் எடுத்துள்ளதாக இயக்குநர் அமீர் குற்றம்சாட்டியுள்ளார்.
தந்தை பெரியார் குறித்து சீமானின் அவதூறு பேச்சு தொடர்பாக பிரபல யூடியூப் சேனலுக்கு இயக்குநர் அமீர் அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது :- நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏன் பெரியாரை எதிர்க்கிறார் என்றால் பெரியார் மக்களை சிந்திக்க சொல்கிறார். அரசியல் என்பது ஒரு தத்துவத்தை கொண்டுவந்து திணித்து, எதிர் கருத்தே சொல்லக்கூடாது நான் சொல்வதை மட்டும் கேள் என்று சொல்வார்கள். ஆனால் தந்தை பெரியார் ஒருவர் தான் ஒரு இயக்கத்தை கட்டமைத்து, சிந்தித்து செயல்படு என்று கூறுகிறார். உன்னிடம் யார் என்ன சொன்னாலும் நீ நம்பாதே, சடங்கு சம்பிரதாயங்களையும் கேள்வி எழுப்பு என்கிறார். பெரியாரை யார் எதிர்க்கிறார்கள். யாரெல்லாம் ஆதிக்க மனநிலையோடு, யாரெல்லாம் அதிகாரம் செய்ய வேண்டும் என்று சாதியாகவோ, மதமாகவோ, நாங்கள் பிறப்பால் உயர்ந்தவன் என்று நினைக்கின்றனரோ அவர்கள் தான் முதன்முதலில் பெரியாரை எதிர்த்தனர்.
சாதி இழிவை நீக்குவதற்காக அவர் கடவுள் மறுப்பை கொண்டுவருகிறார். அப்போது, அவர்கள் சித்தாந்தத்தை திருத்திக் கொண்டிருக்க வேண்டும். மாறாக அவர்கள் பெரியாரை வீழ்த்த வேண்டும் என நினைக்கின்றனர். அரை நூற்றாண்டு காலம் இந்த மண்ணில் பெரியாரை வீழ்த்துவது என்பது சிலருக்கு அவசியமாக பட்டது. இப்போது வரைக்கும் பெரியார் மறைந்துவிட்டார். ஆனால் பெரியார் பெயரை சொல்லிக்கொண்டு பெரியார் போட்ட விதை ஆலமரமாக வளர்ந்து இன்று மக்கள் மனதில் நிற்பதை இவர்களால் ஏற்க முடியவில்லை. தமிழகம் ஆன்மீக பூமியாக திகழ்ந்து வரும் நிலையிலும் ஆன்மிகம் வேறு, இந்துத்துவா வேறு என்று பிரித்து பார்க்கும் தன்மை மக்களுக்கு இருக்கிறது.
இப்போது என்னை போன்றோர் என்ன கேட்கின்றனர் என்றால் உனக்கும், பெரியாருக்கும் என்ன இருக்கிறது. நீ கடவுள் நம்பிக்கையாளன். அவர் முஸ்லீம்களை திட்டுகிறார். விடுதலையில் அவர் முகமது நபி இந்த மண்ணை சேர்ந்தவர் இல்லை என்கிறார் என்று சொல்கின்றனர். அப்படி பெரியார் சொன்னால் இப்போது என்ன?. அதனால் நான் இந்த மண்ணை சேர்ந்தவன் இல்லை என்று ஆகிவிடுவேனா?. எந்த இடத்தில் சொன்னார்? ஏன் சொன்னார். அது அரசியல் நிலைப்பாடாக கூட இருக்கலாம். அந்த இடத்தில் சொல்லி இருக்கலாம். அதே பெரியார் தனது கடைசி காலகட்டத்தில் எப்படி சொல்கிறார் என்றால், இனஇழிவை போக்க இஸ்லாமே சிறந்த மருந்து என்கிறார். இதனை அவர்கள் ஆபத்தாக உணர்கின்றனர். மதத்தையும், கடவுளையும் சொல்லி அரசியல் செய்ய வேண்டிய நிலை சிலருக்கு உள்ளது. அவனுக்கு பெரியார் இடைஞ்சலாக இருக்கிறார். அவர்கள் பெரியாரை தூற்றினார்கள். ஈ.வெ.ரா என பெயர் சொல்லி அழைத்தார்கள். ஆனால் இது எவுமே வெல்லவில்லை. தமிழ்நாட்டில் பெரியாரியவாதிகள் குறைந்துவிட்டனர் என கருதுகிறேன். ஆனால் தமிழ்நாட்டில் பெரியாரை வைத்து வாக்களிக்கவில்லை. ஆனால் அவரை திட்டினால் இங்கு ஜெயிக்க முடியாது. பெரியாரை எப்படி பார்க்க வேண்டுமோ அப்படி பார்க்க வேண்டிய புரிதல் இங்கே உள்ள மக்களிடத்தில் இருக்கிறது. ஒரு தத்துவத்தை ஒருவர் ரொம்ப ஆழமாக விதைத்து விட்டு சென்றுள்ளார் என்றால், அதனை உடைப்போம் என்கிறார்கள். ஆனால் அது அவர்களால் முடியாது. அது விளைந்து நிற்கிறது. அதனை நான் என் பிள்ளைக்கு எடுத்துச்செல்வேன். உங்களால் அதனை வேரோடு வீழ்த்த முடியாது.
இன்றைக்கு உள்ள கல்லூரி இளைஞர்கள், மாணவர்களிடம் சென்று கேட்டுப்பாருங்கள். அவர்கள் பெரியாரை பற்றி தவறாக பேச மாட்டார்கள். பெரியாரை படித்த எந்த பெண்ணும் அவர் குறித்து தவறாக பேச மாட்டார்கள். பெண்ணிய விடுதலைக்காக போராடியவர் பெரியார். 80 வருடங்களுக்கு முன்பு ஒருவர் பெண்களுக்கு சொத்தில் பங்கு தர வேண்டும் என சிந்திக்க முடிகிறது. அவர்கள் பெரியாரை குறைத்து மதிப்பிட்டுவிட்டனர். தமிழ் எழுத்துக்களில் அந்த காலத்திலேயே சிந்தித்து மாற்றம் செய்தவர் பெரியார். நம்மில் ஒரு மகான், சிந்தனையாளன் இருந்திருக்கிறான் என்றால், நீங்கள் அவரை கொண்டாடவிட்டாலும் பரவா இல்லை. அவரை சிறுமைப்படுத்தக் கூடாது. நாம் எங்கோ உள்ள அரிஸ்டாட்டில், சாக்ரட்டீஸ் போன்ற சிந்தனையாளர்களையும், சேகுவேரா போன்ற போராளிகளையும் போற்றி கொண்டிருக்கிறோம். ஆனால் என் மண்ணில் என்னோடு பயணித்தவரை, என் வாழ்க்கைத்தரம் உயர்ந்தவுடன் நான் சிறுமைப்படுத்துவதா?. அவர்கள் எல்லாம் பெருமைக்குரியவர்கள். ஆனால் என்னோடு வாழ்ந்தவர்களை உயர்த்த வேண்டியது அவசியம் அல்லவா. பெரியார் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல. நான் யோசித்து பார்க்கிறேன். நான் பெரியாரை ஏற்கிறேன். இவர்களுக்கு எது கஷ்டமாக இருக்கிறது என்றால், இந்த சிந்தனை உள்ள மனிதர்களிடம் இருந்து வாக்குகளை பெற முடியவில்லை.
இங்கே எல்லோரும் கடவுள் நம்பிக்கையாளனாக உள்ளார்கள். ஆனால் மத வெறியனாக இல்லை. வடநாட்டில் கடவுள் நம்பிக்கையாளன் எல்லாம் மத வெறியனாக இருக்கின்றான். ஆனால் இங்கே கடவுள் நம்பிக்கையாளன் எல்லாம் பகுத்தறிவாளனாக உள்ளனர். இந்த புள்ளி எங்கிருந்து வருகிறது என்றால் பெரியார் என்ற கிழவன் கம்போடு நிற்பதால் வருகிறது. சோசியல் மீடியா வந்தவுடன் பெரியாரை வீழ்த்திவிடலாம் என்று சங்கிகள் நினைத்தனர். சமுக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், இடதுசாரி சிந்தனையாளர்களும் உள்ளேறி ஆக்கிரமித்து நிற்பதை என்னால் பார்க்க முடிகிறது. இங்குதான் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சமுக நீதி அடிப்படையில் படித்து மேலே வந்தவன். ஊடகம், எழுத்து என அனைத்து துறைகளிலும் நிறைந்துள்ளனர். அவனிடம் சாமி பெயரை சொல்லியோ, பொய் சொல்லியோ ஏமாற்றிவிட முடியாது. வடநாடு போல தமிழகத்தை மாற்ற முடியவில்லை என்றால் அடிப்படையில் கை வையுங்கள் என்கின்றனர். இங்கே திராவிட இயக்கங்கள், இடதுசாரிகள், தலித் கட்சிகள் என அனைவரும் தனித்தனி தலைவர்களாக உள்ளனர். ஆனால் அனைவரும் ஒரே மேடையில் உள்ளனர். அப்படி எனில் இவர்களுக்குள் பிரிவினை ஏற்படுத்த வேண்டும். இவர்களை சண்டையிட வைக்க வேண்டும் என நினைக்கின்றனர். இவனை பிரிக்க வேண்டும் என்றால் பெரியார் மீது கை வைக்க வேண்டும் என முடிவெடுக்கின்றனர்.
பாஜகவினர் நேரடியாக சொல்லிப்பார்த்தனர் எடுபடவில்லை. தமிழ் சமூகத்தில் தற்போது யார் எடுபட்டு நிற்கிற தலைவராக உள்ளார். அப்புறம் அவரை நாம்மாள் ஆக்கி விடலாம். பெரியாரை சீமான் விமர்சித்திருந்தாலும், அது அவரது கருத்தாக நான் பார்க்கவில்லை. பேசியது சீமானாக இருந்தாலும், அதனை அவரது ஆழ்மன கருத்தாக நான் பார்க்கவில்லை. பெரியாரை படித்தவர் அவரை விமர்சிக்கலாம், ஆனால் அழிப்பேன் என சீமான் கூறுகிறார். இது அவரது கருத்து கிடையாது. சீமான் எடுத்து வைக்கின்ற அரசியல் நிலைப்பாடு காரணமாக, குறிப்பாக ரவீந்திரன் துரைசாமி போன்றோர் தான் அவரை வழிநடத்துகிறார்கள். எனக்கு என் மண்ணை வளமாக்கிய, என் சிந்தனையை செலுமையாக்கிய தலைவர்கள் எல்லோரும் வேண்டும். ஒருவரை உயர்த்தியோ, ஒரு தாழ்த்தியோ பார்க்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஆனைமுத்தோ, வ.உ.சியோ, பெரியாரோ தாங்கள் தான் உயர்ந்தவர் என்று அவர்கள் காலத்தில் சொன்னதில்லை. இப்போது, ஏன் அவர்கள் பெரியாரை மட்டும் எதிர்க்கிறார்கள் என்றால், அவர்தான் இயக்கமாக கட்டமைத்து உள்ளார். அவர் உருவாக்கிய இயக்கங்கள் தான் கட்சியாக மாறி ஆட்சி நடத்துகிறது. திராவிடர் கழகத்தை அண்ணா அரசியல் கட்சியாக மாற்றினார். அவர் ஆட்சிக்கு வந்த பெரியாரின் சிந்தனைகளை சட்டமாக மாற்றினார். அவருக்கு பின்னால் வந்த எம்.ஜி.ஆர். கலைஞர், ஜெயலலிதா என அனைவரும் திராவிட அரசியலை தான் முன்னெடுத்தனர். மீண்டும் மீண்டும் பெரியாரின் பிம்பத்தை வீழ்த்துகிறேன் என சொல்லி இவர்கள் தங்களது சுய பிம்பத்தை இழந்து கொண்டிருக்கின்றனர்.
நான் அரசியல் சார்பு அற்றவன். எனக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தேவை. எனக்கு களத்தில் சீமானின் அரசியலும் தேவை என்று நினைக்கிறேன். ஆனால் இதுபோன்ற கருத்துக்கள் தேவை அற்றது. மூத்த வழக்கறிஞர் லஜபதிராய் நாடார்களின் நிறம் காவியா?, கருப்பா? என்ற நூலை எழுதியுள்ளார். அதில் நாடார் சமூகம் இந்த பாசிச கும்பலால் எவ்வளவு துன்பங்களுக்கு உள்ளானது என்று படித்து தெரிந்துகொண்ட பின்னரும், நான் ஒரு நிலைப்பாட்டில் நிற்கிறேன் என்கிறீர்கள் என்றால், அது சுய லாபம்தான். தன்னை அடையாளப் படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம்தான். நீங்கள் ஒருவரை அழித்து அரசியல் செய்ய நினைக்கும் ஆசை ஆபத்தானது. அவ்வாறு பெரியார் வீழ்த்தப்பட்டார் என்று வைத்துக்கொண்டாலும், ஆனைமுத்து, வ.உசி போன்ற தலைவர்களை பாஜகவினர் பெருமைப் படுத்துவார்களா. அவர்கள் கொண்டாட நினைப்பது ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்ததான் முயற்சிப்பார்கள். அவர்கள் விநாயகர் சிலைகளை வைத்து கலவரம் செய்ய திட்டமிடுபவர்கள். நான் முரண்களோடு பெரியாரை ஏற்கிறேன். பெரியார் என்றைக்காவது தமிழ் தேசியத்திற்கு எதிராக இருந்தாரா? தமிழ் தேசியத்திற்கு எதிராக இல்லாத, தமிழ் மக்கள் நலனுக்காக பாடுபட்ட ஒருவரை, நீங்கள் ஏன் வீழ்த்த வேண்டும் என நினைக்கின்றீர்கள். அதற்கு என்ன அவசியம் ஏற்படுகிறது?. தலைவர்களை மறுஆய்வு செய்கிறேன் என்று அவதுறுகளை பரப்பக்கூடாது. கடந்த காலங்களை மறுஆய்வு செய்கிறேன் என போவது ஏற்புடையது அல்ல. அப்படி என்றால் என்னால் பிரபாகரனை தலைவராக ஏற்க முடியாது.
பெரியாரின் சிந்தனையால் தமிழ்நாட்டில் உள்ள ஆன்மிக கோவில்கள் எல்லாம் இடிக்கப்பட்டுவிட்டது. எல்லோரும் கடவுள் நம்பிக்கை இல்லாதவராக மாறிவிட்டனர். அதனால் பெரியாரை மறுஆய்வு செய்கிறோம் என்று சொல்லலாம். ஆனால் தமிழகத்தில் ஆன்மிக பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. வேறு வேறு தத்துவமாக இருக்கிறார்கள், சிந்தனையாக இருக்கிறார்கள். ஆனால் ஒன்றாக இருக்கிறார்கள். இவர்களை உடைக்க வேண்டும் என பாசிச சக்திகள் நினைக்கிறார்கள். நான் முரண்பாடுகளுடன் பெரியாரை ஏற்கிறேன். அதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?. இன்றைக்கு தமிழ்நாட்டில் போராட பிரச்சினைகளா இல்லை?. டங்ஸ்டன், புதிய கல்விக்கொள்கை என ஒன்றிய அரசு பல்வேறு பிரச்சினைகளை கொண்டு வருகிறது. இதெல்லாம் குறித்து போராடாமல், பெரியார் ஒரு கருத்து சொல்லி இருக்கார். அது உண்மையும் இல்லை. உண்மை இல்லாத ஒன்றை நாம் ஏன் இவ்வளவு நாட்கள் விவாதிக்க வேண்டும். பெரியார் இந்த மண்ணுக்கு தேவை என்று நான் சொல்கிறேன். தேவை இல்லை என்று நீங்கள் சொல்லுங்கள். இருவரும் நமது கருத்துக்களை மக்கள் மத்தியில் எடுத்து வைக்கலாம் அவர்கள் ஒரு முடிவுக்கு வருவார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.