Homeசெய்திகள்கேள்வி & பதில்செந்தில் பாலாஜி விஷயத்தில் என்ன நடக்கிறது?

செந்தில் பாலாஜி விஷயத்தில் என்ன நடக்கிறது?

-

செந்தில் பாலாஜி விஷயத்தில் என்ன நடக்கிறது?

என்.கே. மூர்த்தி பதில்கள்

குமாரி MC – சங்கராபுரம்
கேள்வி – உங்களுக்கு அம்பேத்கரை ஏன் பிடிக்கும்?

நிறைய காரணங்கள் இருக்கிறது. அம்பேத்கர் வாழ்ந்த காலத்திலும், தற்போதும் அவரளவிற்கு படித்தவர்கள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. விடுதலையடைந்த இந்தியா எப்படி இருக்கிறது. இந்திய தலைவர்கள், இந்திய மக்கள் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிய வெளிநாட்டு பத்திரிகையாளர் ஒருவர் இந்தியா வந்தார்.

உங்களுக்கு அம்பேத்கரை ஏன் பிடிக்கும்?
டாக்டர் அம்பேத்கர்

இரவு நேரத்தில் காந்தியின் வீட்டிற்கு சென்றார். காந்தி உறங்க சென்றுவிட்டதாக காவலாளி தெரிவித்தார். அந்த பத்திரிகையாளர், நாட்டின் பிரதமர் நேருவின் வீட்டிற்கு சென்றார். அவரும் உறங்கிவிட்டார்.

அடுத்தது அம்பேத்கர் வீட்டிற்கு சென்றார். அப்பொழுது அம்பேத்கர் படித்துக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருந்தார். அப்பொழுது அந்த பத்திரிகையாளர், காந்தி, நேருவை சந்தித்து பேட்டி எடுக்கலாம் என்று நினைத்து சென்றேன். அவர்கள் உறங்கிவிட்டார்கள். நீங்கள் நடுராத்திரி வேளையில் விழித்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று வியப்புடன் கேட்டார்.

அதற்கு காந்தி, நேருவின் சமுதாய மக்கள் விழித்துக் கொண்டார்கள்.  அதனால் அவர்கள் தூங்கப் போய்விட்டார்கள். என் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக நான் விழித்துக் கொண்டிருக்கிறேன் என்று அம்பேத்கர் தெரிவித்தார்.

கேள்வி – செந்தில் பாலாஜியை காப்பாற்றுவதில் முதலமைச்சர் ஆர்வம் காட்ட வேண்டிய காரணம் என்ன?

பதில் – ஒரு தந்தை, ஆபத்தில் சிக்கிக் கொண்ட மகனை காப்பாற்ற எப்படி காரணத்தை ஆராயந்து பார்க்க முடியாதோ அதேபோன்று ஒரு தொண்டனை காப்பாற்ற அவருடைய தலைவர் முயற்சி செய்வதும் சரியானதே.

செந்தில் பாலாஜி விஷயத்தில் என்ன நடக்கிறது?
செந்தில் பாலாஜி கைது

கேள்வி – அமலாக்கத்துறையின் செயல்பாடுகளை பாராட்டக் கூடாதா?

பதில் – பாராட்டும் படியாக இல்லை. மத்தியில் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தப் பின்னர் எதிர் கட்சிகளின் தலைவர்கள் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்து கொடுமைப்படுத்துகிறார்கள். உதாரணத்திற்கு முன்னாள் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மீது வழக்குப் பதிவு செய்து 105 நாட்கள் சிறையில் அடைத்தார்கள். ஆனால் அவர் மீது இதுவரை குற்றப் பத்திரிகை எதுவும் தாக்கல் செய்யவில்லை. இதுபோல் பெரும்பாலான வழக்குகள் பழிவாங்குவதற்காக போடப்பட்டவைதான்.

கேள்வி – செந்தில் பாலாஜியை கைது செய்ய பாஜக ஆர்வம் காட்ட வேண்டிய அவசியம் என்ன ?

பதில் – 2021ல் திமுக ஆட்சிக்கு வந்தபோது கோவை, திருப்பூர்,சேலம், ஈரோடு ஆகிய கொங்கு பகுதிகளில் அதிமுக  – பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அப்போது தமிழ்நாட்டில் இருந்து பிரித்து “கொங்கு நாடு” என்ற தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்ற குரல் வலுவாக எழுந்தது.

செந்தில் பாலாஜியை கைது செய்ய பாஜக ஆர்வம் காட்ட வேண்டிய அவசியம் என்ன ?

அதன் பின்னர் உள்ளாட்சி தேர்தல் வந்தது. திமுக தேர்தல் பொறுப்பாளராக செந்தில் பாலாஜி களம் இறங்கினார். ஒரு வார்டு கவுன்சிலர் கூட அதிமுக – பாஜக கூட்டணியால் வெற்றிபெற முடியவில்லை. கொங்குநாடு என்ற கோரிக்கையே காணாமல் போய்விட்டது.

பாஜகவிற்கு கோவையில் செல்வாக்கு இருக்கிறது, திருப்பூரில் செல்வாக்கு இருக்கிறது என்ற கட்டுக் கதையை உடைத்தவர் செந்தில் பாலாஜி. நாடாளுமன்ற தேர்தலில் செந்தில் பாலாஜி திமுகவிற்கு வேலை செய்யக் கூடாது. அதுதான் பாஜகவின் திட்டம்.

கேள்வி – செந்தில் பாலாஜியின் மனைவி ஆட்கொணர்வு மனு ஏற்புடையதா?

பதில் – ஒருவரை சட்டப்படி கைது செய்து, ரத்த உறவினர்களிடம் தகவல் தெரிவித்துவிட்டு அழைத்து சென்றால் ஆட்கொணர்வு மனு செல்லாது. ஆனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரு மாநில அமைச்சரை சட்டத்திற்கு புறம்பாக துன்புறுத்தி கைது செய்துள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். அந்த சூழ்நிலையில் ஆட்கொணர்வு மனு அவசியமானது.

செந்தில் பாலாஜி விஷயத்தில் என்ன நடக்கிறது?
செந்தில் பாலாஜி மனைவி

கேள்வி – செந்தில் பாலாஜிக்கு மாரடைப்பு என்பது நம்பும் படியாக இல்லையே?

பதில் – கொஞ்சம் மனசாட்சியோடு பேசுங்கள் சுரேஷ். ஒருவருக்கு மாரடைப்பு என்பதும், அறுவை சிகிச்சை என்பதும் நாடகமாக இருக்க முடியாது. ஒருவர் போலியாக அறுவை சிகிச்சை செய்துக் கொள்ள முடியுமா? சாத்தியமா? என்பதை யோசியுங்கள்.

செந்தில் பாலாஜி விஷயத்தில் என்ன நடக்கிறது?
Heart Attack

ஏழுமலை – முகப்பேர்
கேள்வி – செந்தில் பாலாஜி செய்த ஊழலை நீங்கள் நியாயப் படுத்துகிறீர்களா?

பதில் – நிச்சயமாக நியாயப்படுத்த வில்லை. அது என் வேலையும் இல்லை. ஒரு ரூபாய் ஊழலாக இருந்தாலும் ஊழல் ஊழல்தான்.

ஆனால் ஊழலை கண்டிக்கிறேன். அதற்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று புறப்பட்டுள்ளவர்களின் நோக்கத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையில் அவர்கள் ஊழலை ஒழிக்கக் கூடியவர்களாக இருந்தால் எல்லோரிடமும் சமமாக நடந்துக் கொள்ள வேண்டும். பாஜக, அதிமுகவினர் ஊழல் செய்தால் தேசப்பற்று என்பதும் திமுக தவறு செய்தால் தேசத் துரோகம் என்பதை தான் கண்டிக்கிறேன்.

சங்கர் – ராமாபுரம்
கேள்வி –  நடிகர் விஜய் அரசியலில் தாக்குப் பிடிப்பாரா?

பதில் – சினிமாவில்  இயக்குனர் சொல்வதை மட்டும் கேட்டால் போதும். படம் ஹிட்டாகிவிடும். ஆனால் அரசியல் களத்தில் நிச்சயமாக  வெற்றிப் பெற முடியும் என்கிற உறுதியான வழிமுறை எதுவும் கிடையாது.

பிரபலமான ஹீரோக்களுக்கு ரசிகர் மன்றங்களின் ஆதரவை வைத்து ஒரு குறிப்பிட்ட சதவீதம் வாக்குகள் கிடைக்கும். அதையும் அடுத்த தேர்தல் வரை தக்கவைக்க வேண்டும். ஒரு நடிகர் அரசியல் வாதியாக உருமாற்றம் அடைவது எளிதான வேலை இல்லை.

செந்தில் பாலாஜி விஷயத்தில் என்ன நடக்கிறது?
நடிகர் விஜய்

அந்த முயற்சியில் இறங்கிய நடிகர்கள் சிவாஜி கணேசன், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, விஜயகாந்த், விஜயசாந்தி, பாக்கியராஜ், டி.ராஜேந்தர், கார்த்திக் என்று பெரிய பட்டியலே தோல்வியை சந்தித்து இருக்கிறது.

செந்தில் – தென்றல் நகர்
கேள்வி – செந்தில் பாலாஜி விஷயத்தில் என்ன நடக்கிறது?

பதில் – செந்தில் பாலாஜி மதிமுக, அதிமுக, திமுக என்று அனைத்து கட்சிகளிலும் சேர்ந்துவிட்டார். அவர் இன்னும் சேராத கட்சி பாஜக மட்டும் தான். தற்போது அதற்கான வேலைகள் தான் நடந்து கொண்டிருக்கிறது.

இனியன் – ஆவடி
கேள்வி – நடிகர் எம்ஜிஆர் அரசியலில் சாதித்ததைப் போல் விஜய் சாதிப்பாரா?

பதில் – சினிமா என்ற ஊடகம் 1903 ம் ஆண்டிற்கு பின்னர் தான் மக்களிடம் வந்தது. தமிழில் முதன் முதலில் 1931ல் வெளிவந்த “காளிதாஸ்” திரைப்படம் ஒரே திரையரங்கில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் ஓடி சாதனை படைத்தது. அப்போது மக்கள் பார்த்திராத, அரிதான ஒரு ஊடகம் சினிமா.

அந்த காலக்கட்டத்தில் (1947 ஏப்ரல்-1) ராஜகுமாரி என்ற படத்தில் அறிமுகமானவர்தான் எம்ஜிஆர். அந்த படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியவர் கலைஞர் கருணாநிதி.

இராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகளை தெரு கூத்துகளில் பார்த்து பொழுது போக்கி வந்த மக்களுக்கு “சினிமா” என்ற விஞ்ஞான கண்டுப்பிடிப்பு மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. சினிமாவில் வரும் கதாநாயகன், நாயகி, வில்லன்களை தங்களுடைய வாழ்க்கையில் ஒருவராகவே கற்பனை செய்ய தொடங்கிவிட்டனர்.

எல்லோரும் எம்ஜிஆராகவும், சிவாஜியாகவும் கற்பனை செய்துக் கொண்டார்கள். அவர்களைப் போல் முடி வெட்டிக் கொண்டார்கள், அவர்களைப் போல் உடை உடித்திக் கொண்டார்கள். தமிழர்கள் ஒரு கட்டத்தில் சினிமா பைத்தியமாகி விட்டார்கள்.

செந்தில் பாலாஜி விஷயத்தில் என்ன நடக்கிறது?
விஜய் மற்றும் எம்.ஜி.ஆர்.

இரண்டு மூன்று படங்களில் நடித்து கொண்டிருந்த எம்ஜிஆர் 1952ல் திமுகவில் சேர்ந்தார். அரசியலில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதியின் கருத்துகளை உள்வாங்கிக் கொண்ட எம்ஜிஆர், அதனை சினிமாவில் வசனமாக பேசி நடித்தார்.

சினிமாவில் கிடைத்த ரசிகர்களும், திமுகவில் கிடைத்த அரசியல் அனுபவங்களும் எம்ஜிஆரின் அரசியல் வாழ்க்கைக்கு பெரிதும் கைகொடுத்தது. 25 ஆண்டுகள் சினிமா வாழ்க்கை, 20 ஆண்டுகள் அரசியல் அனுபவம் இவை இரண்டும் எம்ஜிஆரை 1972ல் வெற்றியாளராக மாற்றியது. மக்களுக்கு சினிமாவைப் பற்றி புரிதல் தொடங்கிய காலத்தில் விஜய் சினிமாவிற்கு வந்தார். விஜய் பின்னால் பெரும் ரசிகர் கூட்டம் இருந்தாலும், அது கணிசமான ஓட்டு வங்கியை உறுதிப் படுத்தும். அதை வைத்து வெற்றிப்பெற முடியாது.

கேள்வி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் உங்களுக்கு பிடித்த அரசியல் நடவடிக்கை எது?

பதில் – சந்தேகமே இல்லாமல் அமைச்சர் செந்தில் பாலாஜி விஷயத்தில் முதலமைச்சர் செயல்பட்ட வேகம், எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் பாராட்டும் படியாக இருந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2011 முதல் 2015 வரை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தார்.

அப்போது 2014 ம் ஆண்டு ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பொறியாளர் பிரிவில் பணி நியமனம் செய்ததில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி பணத்தை பெற்றுக்கொண்டு பணி நியமனம் செய்யாமல் ஏமாற்றிவிட்டதாக தேவசகாயம் என்பவர் 2015ல் புகார் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி, அவருடைய சகோததரர் உள்ளிட்ட 40 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தது.

செந்தில் பாலாஜி விஷயத்தில் என்ன நடக்கிறது?
முதலமைச்சர் ஸ்டாலின்

அது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் புகார் தாரர்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர் இடையே சமரசம் ஏற்பட்டதால் செந்தில் பாலாஜி மீதான குற்றவியல் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.

ஒரு வழக்கில் புகார் தாரர் இல்லை. சமரசம் செய்யப்பட்டு விட்டது. உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துவிட்டது. ஆனால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமலாக்கத்துறை தானாக முன்வந்து செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்க நோட்டீஸ் வழங்கியது. மேலும் உயர் நீதிமன்றம் முடித்து வைத்து, அளித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது. உச்ச நீதிமன்றமும் அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று அனுமதி வழங்கியது. இதுதான் வழக்கின் சாரம்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அமலாக்கத்துறை எதிர் கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலத்தில் மட்டும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டி வருவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.

MUST READ