தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருவதற்கு காரணம் என்ன?
என். கே. மூர்த்தி பதில்கள்
விஜயா -ஆவடி
(1) கேள்வி – மனதில் கெட்ட கெட்ட சிந்தனைகள் தோன்றுவதை தடுப்பது எப்படி?
பதில் : காரல் மார்க்ஸின் காதல் மனைவி ஜென்னியின் வாழக்கையில் நடந்த சம்பவம்.
ஜென்னி, தன்னைவிட நான்கு வயது இளையவர் காரல் மார்க்ஸை காதலித்தார். ஏதாகிலும் வேலைக்கு சென்று வருமானத்திற்கு உத்தரவாதம் செய்தபின்னர் தான் திருமணம் என்று மார்க்ஸ் உறுதியுடன் இருந்தார்.

அப்போது திருமணம் தள்ளிப் போகப்போக என் மனம் ஒரு நிலையில் இல்லை. அவ்வப்போது தவறான சிந்தனைகள் தோன்றுகிறது. இனியும் என்னால் உங்களை பிரிந்து இருக்க முடியாது என்று ஜென்னி கடிதம் எழுதியிருந்தார்.
அதற்கு காரல்மார்க்ஸ், மனதில் எழும் சிந்தனையை கட்டுப்படுத்த வேண்டாம். அப்படி தடுக்க முயற்சி செய்தால் மன அழுத்தம் அதிகமாகி மேலும் தவறான சிந்தனைக்கு தான் வழி வகுக்கும். அதனால் சிந்தனையை அதன் போக்கில் விட்டுவிடவும். ஆனால், மனதை அமைதியாக கவனித்து பார்க்கவும்.
விஞ்ஞானி ஒரு பொருளை எப்படி கூர்ந்து கவனிக்கின்றாரோ அதேபோன்று உன் மனதை கூர்ந்து கவனிக்கவும். உன் மனம் உன் கட்டுப்பாட்டை மீறி செல்லுவதை உன்னால் அறிய முடியும். மீண்டும் மீண்டும் உன் மனதை உற்று கவனித்து பார். ஒரு கட்டத்தில் உன் மனம் உன் கையில் இருப்பதை உணர்ந்து கொள்வாய். இதை முயற்சி செய்து பார் என்று மார்க்ஸ் எழுதிய பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த பயிற்சியை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.
விஜயலட்சுமி – ஆவடி
(2 ) கேள்வி – மகளிருக்கு உதவித் தோகை குறித்து உங்கள் கருத்து?
பதில் – மகளிருக்கு உதவித் தொகை வழங்கவில்லை. உரிமை தொகை வழங்கப் போகிறார்கள் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.
அந்த உரிமைத் தொகையும் பொருளாதாரத்தில் வறுமை நிலையில் உள்ள பெண்களுக்கு கிடைப்பதே நியாயமானது.
அனைவருக்கும் வீடு’ என்ற திட்டம் அறிவிக்கப்பட்டால், வீடு இல்லாதவர்களுக்கு ஓர் இல்லம் அமைத்துத் தருவது என்று பொருள், அனைவருக்கும் நிலம்’ என்றொரு திட்டம் என்றால், நிலமற்ற கூலித் தொழிலாளர்கள், உழுபவர்களுக்கு நிலம் சொந்தம் என்பதுதான் அடிப்படை நோக்கம். ‘முதியோர் ஓய்வூதியம்’ என்றால், ஆதரவற்ற முதியோரின் நலன் காக்க முனையும் திட்டம் என்று பொருள். அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் என்றால், வேலைவாய்ப்பற்றவர்களுக்கு முன்னுரிமை என்று பொருள்.
அந்த வகையில், இந்த ‘மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ இரண்டு நோக்கங்களைக் கொண்டது. பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது.
அடுத்ததாக ஆண்டுக்கு 12,000 ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு அவர்கள் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்ட திட்டம். இந்த திட்டம் ஒரு புரட்சிகரமான திட்டம். நீங்களும் நானும் வரவேற்க வேண்டிய திட்டம்.
நாராயணன்– திருவேற்காடு
(3) கேள்வி – திராவிட இயக்கங்களுக்கும் பாஜகவிற்கும் உள்ள அடிப்படை வேறுபாடு என்ன?
பதில் – சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் ஆகிய கோட்பாடுகளை அடிப்படையாக வைத்து செயல்படக் கூடிய இயக்கங்கள் திராவிட இயக்கங்கள்.
இந்த கோட்பாடுகளுக்கு விளக்கம் தெரியாமலும் அல்லது தெரிந்தும் அதனை ஏற்றக்கொள்ள மறுத்து செயல்பட்டு வரும் கட்சி பாஜக. அதனால் இவர்களுக்குள் முரண்பாடுகள் இருப்பது இயல்பானது, தவிர்க்க முடியாதது.
கனகராஜ் – காமராஜர் நகர்
(4) கேள்வி – தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருவதற்கு காரணம் என்ன?
பதில் – திமுக நிர்வாகிகள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக அமைச்சர்கள். திமுகவின் செயல்பாடுகள் தான் பாஜக வளர்ச்சிக்கு காரணம்.
ஜாகீர் – சங்கராபுரம்
(5) கேள்வி – அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆளுநர் பதவி நீக்கம் செய்துள்ளாரே?
பதில் – ஒருவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதும், இன்னொருவரை அமைச்சராக நியமிப்பதும் ஆளுநருக்கு உரிய அதிகாரங்கள் என்றால், பிறகு முதலமைச்சர் எதற்காக? அரசே எதற்காக? எல்லாவற்றையும் ஆளுநர் பார்த்துக் கொள்வார் என்பது அடாவடித்தனமும், அராஜகமும் ஆகும்!
அது மட்டுமல்லாமல், செந்தில் பாலாஜி அமைச்சராக நீடித்தால் சாட்சிகளைக் கலைத்து விடுவார் என்கிறார். செந்தில் பாலாஜியின் மீதான குற்றச்சாட்டு என்ன, குற்றப் பத்திரிகை எப்போது தாக்கல் செய்யப்படும், சாட்சிகளாக யார் நிறுத்தப்பட இருக்கிறார்கள் என்று எதுவும் தெரியாத நிலையில், தமிழ்நாட்டு ஆளுநர் தன்னைத்தானே தலைமை நீதிபதியாகக் கருதிக் கொண்டு இப்படி அறிவித்திருக்கிறார்.
அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு என்றால், புதிய அமைச்சரை நியமிக்கும் அதிகாரமும் அவருக்கு உண்டா? அப்படியானால் வானதி சீனிவாசன்தான் (நிர்மலா சீதாராமனுக்குத் துணையாக) தமிழ்நாட்டின் புதிய நிதி அமைச்சர் என்று அவர் அறிவித்து விட முடியுமா?
அவரைத் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்த ஒன்றிய அரசே இந்தக் கோமாளித்தனத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல், அவர் ஆணையை அவரே திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது! இது தமிழ்நாட்டிற்கு வந்துள்ள அவமானம்!
அன்புள்ள APC NEWS TAMIL வாசகர்களுக்கு வணக்கம் !! வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமை கேள்வி– பதில் இடம்பெறுகிறது. இதில் உங்கள் கேள்விகளும் இடம் பெற வேண்டும் என்று ஆசிரியர் குழு விரும்புகிறது. மேலும், இதில் இடம் பெறுகின்ற கேள்விகளில் முக்கியமான மூன்று கேள்விகள் தேர்வு செய்து அதில் முதல் கேள்விக்கு ரூபாய். 500, இரண்டாவது கேள்விக்கு ரூபாய். 250 மற்றும் மூன்றாவது கேள்விக்கு ரூபாய். 100 பரிசுகள் வழங்கப்படும். உங்கள் கேள்விகள் அனுப்ப வேண்டிய வாட்ஸப் எண்#. 9176541031 |