நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதைப் பற்றி உங்கள் கருத்து?
என்.கே.மூர்த்தி பதில்கள்
செல்வி – கடலூர்
கேள்வி – நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதைப் பற்றி உங்கள் கருத்து?
பதில் : ஒரு ஊருக்கு புதிய மனிதர் ஒருவர் வந்தார். நீங்கள் யார்? எங்கே இருந்து வருகிறீர்கள் என்று அந்த ஊர் மக்கள் கேட்டார்கள். நான் தேவலோகத்தில் இருந்து வருகிறேன் என்று அந்த மனிதர் சொன்னார். எல்லோரும் சிரித்தார்கள். உன்னை யார் இங்கே அனுப்பி வைத்தது என்று மீண்டும் கேட்டார்கள். கடவுள் தான் அனுப்பி வைத்தார் என்று அவர் கூறினார். இதை கேட்ட அந்த மக்கள் மேலும் சிரித்தார்கள். இந்த ஆளுக்கு புத்தி சரியில்லை என்று நினைத்து கோவிலுக்கு அழைத்து சென்றார்கள்.
மனநிலை பாதிக்கப்பட்டவர்களை தெளிய வைக்கின்ற கோயில் அது. அங்கே இருந்த மண்டபத் தூணில் அந்த நபரை கட்டிப்போட்டு விட்டார்கள். இப்போது அந்த மனிதர் சிரித்தார். ஏன் சிரிக்கிறாய் என்று எல்லோரும் கேட்டார்கள். என்னை அனுப்பி வைக்கும்போது கடவுள் சொன்னதை நினைத்து சிரித்தேன் என்றார். கடவுள் என்ன சொன்னார்? நீங்கள் இப்படி என்னை கட்டி வைப்பீர்கள் என்றும் கை கொட்டி சிரிப்பீர்கள் என்றும் கடவுள் சொல்லிதான் அனுப்பி வைத்தார். அவர் சொன்னபடியே நடக்கிறது. நான் கடவுளின் தூதர் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரங்கள் தேவையில்லை என்றார். மக்கள் யோசித்தார்கள். சரி, நீ என்ன தான் சொல்லவர என்று கேட்டார்கள். என்னை முழுமையாக நம்புங்கள், நான் ஒரு தீர்க்கதரிசி, கடவுளால் அனுப்பப்பட்ட தூதுவன். உங்களுக்கு வழிகாட்டவும், உங்களுக்கு சேவை செய்யவும் வந்துள்ளேன் என்றார்.
இப்போது இன்னொரு சிரிப்பு சத்தம் கேட்டது. பலமான சிரிப்பு சத்தம். வேறொரு தூணில் கட்டப்பட்டிருந்த மனிதர் சிரித்தார். நீ ஏன் சிரிக்கிறாய்?அந்த மனிதர் சொல்வது பொய். நான்தான் கடவுள்,நான் அவரை அனுப்பி வைக்கவில்லை என்றார். ஒருத்தன் நான் கடவுள் என்கிறான், இன்னொருத்தன் கடவுளின் தூதுவன் என்கிறான். மக்களுக்கு ஒரே குழப்பம்.
இப்படித்தான் நானும் குழம்பி போய் இருக்கிறேன். விஜயின் கொள்கை என்ன? அவர் கொள்கையில் அவர் உறுதியாக இருப்பாரா? ஒன்றிய அரசு நடத்தப் போகும் அதிரடி சோதனைக்கெல்லாம் தாக்குப்பிடிப்பாரா? மக்கள் பிரச்சனைக்கு களத்தில் இறங்கி போராடுவாரா? அவரால் முடியுமா? இதுபோன்ற நிறைய கேள்விகள் இருக்கிறது.
மணி – போரூர்
கேள்வி – தமிழகத்தில் பாஜக வளர்ச்சி அடைந்து வருகிறதா? இல்லையா?
பதில் : நாளுக்கு நாள் நாட்டிற்கு ஆபத்து அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது.
சதீஷ் – பட்டாபிராம்
கேள்வி – ஆவடி நாசருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளாரே?
பதில் : ஆவடி சா.மு.நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. தற்போது நாசரிடமும் நிறைய மாற்றங்கள் தெரிகிறது.
அண்ணாமலை ஒரு காமெடி தலைவர், அவர் பேசுவதை யெல்லாம் பெரியதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை.
யாழினி – ஆவடி
கேள்வி – புரட்சி என்ற வார்த்தைக்கும் தொண்டு என்ற வார்த்தைக்கும் உள்ள வேறுபாடு என்ன?
பதில் : மனித வாழ்வின் அடிப்படை நோக்கம் மற்றவர்களுக்காக வாழ்வதுதான். அய்யா சுப.வீரபாண்டியன் அவர்கள் ஒரு நிமிடச் செய்தியில் இந்த கேள்விக்கு விடை கூறியுள்ளார். “சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா” என்று தொடங்கும் பாடலில் “தனி உடைமைக் கொடுமைகள் தீர புரட்சி செய்யடா” என்றுதான் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் முதலில் எழுதினார். அந்த வரியை தயாரிப்பாளரும் தணிக்கை குழுவும் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால், அந்த வரியை மறுபடியும் “தனி உடைமைக் கொடுமைகள் தீரத் தொண்டு செய்யடா” என்று மாற்றி எழுதினார்.
எனவே புரட்சிக்கும் தொண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது. தொண்டு என்பது தன்னை வருத்திக் கொண்டு மற்றவர்களுக்கு உதவி செய்வது. புரட்சி என்பது தன்னை அழித்துக் கொண்டாவது மக்களுக்கு உதவி செய்வது. புரட்சி என்பது தீமைகளை, மக்களுக்கு தீமை விளைவிக்கின்ற எதுவாக இருந்தாலும் அதை அழிக்கக் கூடியது. சாவை கண்டு அஞ்சாமல் களம் காண்பது. இந்த சிக்கல்கள் தொண்டு செய்வதில் இல்லை.
அய்யாசாமி – பழவந்தாங்கல்
கேள்வி – பழனி முருகன் கோவிலுக்குள் மற்ற மதத்தினருக்கு அனுமதி இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில் : இதைப்பற்றி ஆன்மீக புரட்சியாளர் அய்யா சுகி. சிவம் அவர்கள் பேசியிருக்கிறார். அதில் பழனி முருகன் கோவில் கொடி மரம் அருகில் இந்துக்கள் தவிர வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் கோவிலுக்குள் அனுமதி இல்லை என்று விளம்பரப் பலகை வைக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் பழனி முருகன் கோவிலில் கொடி மரம் இல்லை.
ஏன் எனில் ஆகம முறைப்படி கட்டப்பட்ட கோவிலில் மட்டுமே கொடி மரம் இருக்கும். சித்தர்களால் கட்டப்பட்ட கோவிலில் கொடி மரம் இருக்காது. பழனி கோவில் சித்தர்களால் கட்டப்பட்டது. இந்த புரிதல் கூட இல்லாமல் ஒருவர் வழக்கு போடுகிறார். அதையும் ஏற்று ஒரு நீதிபதி தீர்ப்பு வழங்குகிறார். இவர்களில் ஒருவருக்கும் சாமி முக்கியமில்லை, சண்டைதான் முக்கியம் என்று பேசியிருக்கிறார்.
அன்புள்ள APCNEWSTAMIL வாசகர்களுக்கு வணக்கம். வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமை கேள்வி– பதில் இடம்பெறுகிறது. இதில் உங்கள் கேள்விகளும் இடம் பெற வேண்டும் என்று ஆசிரியர் குழு விரும்புகிறது. மேலும், இதில் இடம் பெறுகின்ற கேள்விகளில் முக்கியமான மூன்று கேள்விகள் தேர்வு செய்து அதில் முதல் கேள்விக்கு ரூபாய். 500, இரண்டாவது கேள்விக்கு ரூபாய். 250 மற்றும் மூன்றாவது கேள்விக்கு ரூபாய். 100 பரிசுகள் வழங்கப்படும். உங்கள் கேள்விகள் அனுப்ப வேண்டிய வாட்ஸப் எண்#. 9176541031 |