என். கே. மூர்த்தி பதில்கள்
நாசரின் பதவி பறிப்பிற்கு முக்கிய காரணம் என்ன?
ஷேக்முகமது -ஆவடி
கேள்வி : அதிகாரம் ஊழலை உருவாக்கும் என்பது உண்மையா?
பதில் : அதிகாரம் ஊழலை உருவாக்கும், முழுமையான அதிகாரம் முழுமையான ஊழலை உருவாக்கும் என்று ஜெர்மன் நாட்டின் வரலாற்று ஆசிரியர் லார்டு ஆக்டன் என்பவர் கூறியுள்ளார்.
இந்த கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. நான் மாறுபடுகிறேன். திரிபுரா மாநிலத்தில் தொடர்ந்து 20 ஆண்டுகள் முதலமைச்சர் பதவியில் இருந்த மாணிக் சர்க்கார் ஆட்சியை இழந்ததும் துணைவியாருடன் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் குடியேறினார்.
2018ல் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது 1080 ரூபாய் கையில் இருப்பதாகவும், வங்கியில் 9,720 ரூபாய் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். முதலமைச்சராக இருந்தபோது வாங்கிய சம்பளத்தை கட்சிக்கு கொடுத்துவிட்டு, கட்சி கொடுத்து வந்த ஐந்தாயிரம் ரூபாயில் மனநிறைவுடன் வாழ்ந்து வந்தார்.
“மாணிக் சர்க்காரின் நேர்மைக்கு முன்பு அதிகாரம் மண்டியிட்டு கிடந்தது”.
அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு துரும்பைக் கூட சொந்தமாக்கிக் கொள்ள முயற்சி செய்யவில்லை.
ஊழல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தனது மனதிற்குள் வைத்துள்ள நபரை மட்டுமே அதிகாரம் ஊழல் செய்ய வைக்கும். அதற்கு முன்பு அந்த நபருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்திருக்கலாம். அதிகாரம் என்ற “வாய்ப்பு கிடைக்காத யோக்கியவான்கள்” நிறைய பேர் இருக்கின்றார்கள். அந்த நபர்களுக்கு ஊழல் செய்வதற்கு சந்தர்ப்பம் அமையவில்லை. வாய்ப்பு கிடைத்ததும் ஊழல்வாதியாக மாறிவிடுகிறார்கள்.
ஆனால் ஊழல் செய்ய மாட்டேன் என்ற சக்தியை, எண்ணத்தை வைத்துள்ள மாணிக் சர்க்கார், நம்ம ஊரில் பி.டி.தியாகராஜன், மா.சுப்பிரமணியன் போன்ற மனிதர்களை இந்த அதிகாரத்தால் ஊழல் செய்ய வைத்துவிட முடியாது. ஆகவே மனிதனை ஊழல் பேர்வழியாக ஆக்குவது அதிகாரம் இல்லை. ஒரு மனிதனிடம் அதிகாரம் வந்தால் அவன் எப்படிப் பட்டவன் என்று தெரிந்து கொள்ள அதிகாரம் பயன்படுகிறது.
சக்தி – செவ்வாப்பேட்டை
கேள்வி : ஆவடி நாசரின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்?
பதில் : பொது வாழ்க்கையில் பதவி என்பது தோலில் போடப்பட்ட துண்டு போன்றது என்றார் அண்ணா.
உண்மையான திமுக தொண்டன் பதவி போவது, வருவதைப் பற்றி கவலப்பட மாட்டான்.
திமுக 1967ல் முதன்முதலில் ஆட்சியை பிடித்தது. அன்றைய காலத்தில் இருந்து தற்போதுவரை அமைச்சரவையில் இலாக்காகள் மாறுதல், அமைச்சரவையில் புதிய உறுப்பினரை சேரத்தல் மட்டுமே நடக்கும். திமுக அரசில் ஒரு அமைச்சரை நீக்கியது தற்போதுதான் நடந்துள்ளது.
இந்த நீக்கம் நாசருக்கு தீராத வலியை ஏற்படுத்தி இருக்கும் என்று கருதுகிறேன். தொகுதிக்கு அறிமுகம் இல்லாத நபர் பாண்டியராஜனிடம் தோல்வி அடைந்த போது ஏற்பட்ட வலியைவிட இந்த வலி கூடுதலாக இருக்கும். ஆனால் அந்த வலியில் இருந்து அவருடைய அனுபவத்தை வைத்து மீண்டு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
ஜெகதீசன் – புழல்
கேள்வி : நாசரின் பதவி பறிப்பிற்கு முக்கிய காரணம் என்ன?
பதில் : நாசரின் ‘நா‘ ‘ச,ருக்கியதால் ஏற்பட்ட பாதிப்பு என்கிறார்கள்.
சுரேஷ் – பட்டாபிராம்
கேள்வி : ஆவடி மேயர் செயல்பாடு எப்படி?
பதில் : மேயர் பதவிக்கும் மாநகராட்சிக்கும் ஏதாகிலும் தொடர்பு இருக்கிறதா? அப்படி இருக்கிறது என்றாலும் அது மாதம் ஒருமுறையோ அல்லது இரண்டு மாதத்திற்கு ஒருமுறையோ நடைபெறும் மன்ற கூட்டத்தோடு முடிந்தது. மற்ற நாட்களில் மாநகராட்சி என்றால் என்ன? நிர்வாகத்திற்கும் மேயருக்கும் என்ன தொடர்பு என்றே அவருக்கு தெரியவில்லை.
அன்புராஜ் – சோழாவரம்
கேள்வி : கர்நாடகாவில் பாஜக தோல்வி அடைந்தது குறித்து?
பதில் : பாஜகவிற்கு எந்த மாநிலத்திலும் பெரியதாக செல்வாக்கு இல்லை. அந்த கட்சியின் தலைவர்களின் பேச்சு, செயல் அனைத்தும் அமைதியை விரும்பும் மக்களுக்கு எதிராகவே இருக்கிறது. அமைதியாக வாழ மக்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனால் பிரதமர், உள்துறை அமைச்சர் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சாரம் மக்களின் மன நிலைக்கு எதிராக இருந்தது. இதேபோன்று அவர்களின் பேச்சு இருந்தால் நாடாளுமன்ற தேர்தலிலும் தோல்வியை சந்திப்பார்கள்.
கணேசன் – சென்னை
கேள்வி : காவல்துறையில் நல்ல அதிகாரிகளைப் பற்றி செய்தி எதுவும் வருவதில்லையே?
பதில் : தவறு செய்யக்கூடிய அதிகாரிகள் அனைத்து துறைகளிலும் இருக்கிறார்கள். குறிப்பாக, காவல்துறையில் நல்லது செய்யக் கூடிய அதிகாரிகள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.
ஆவடி காவல் ஆணையரகத்தில் இணை ஆணையர் விஜயகுமார் வந்ததில் இருந்து குற்றங்கள் பெரிய அளவில் குறைந்திருக்கிறது. திட்டமிட்டக் கொலை, திட்டமிட்டு திருட்டு என்று குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்க காவல்துறையினர் இரவும் பகலும் கடுமையாக உழைத்து வருகின்றனர். காவல்துறையில் தவறான அதிகாரிகள் குறைவு. ஆனால் சிறப்பான முறையில் பணி செய்யும் அதிகாரிகள், உதவி செய்யும் அதிகாரிகள் ஏராளமானோர் இருக்கிறார்கள்.
அன்புள்ள APCNEWSTAMIL வாசகர்களுக்கு வணக்கம். வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமை கேள்வி- பதில் இடம்பெறுகிறது. இதில் உங்கள் கேள்விகளும் இடம் பெற வேண்டும் என்று ஆசிரியர் குழு விரும்புகிறது. மேலும், இதில் இடம் பெறுகின்ற கேள்விகளில் முக்கியமான மூன்று கேள்விகள் தேர்வு செய்து அதில் முதல் கேள்விக்கு ரூபாய். 500, இரண்டாவது கேள்விக்கு ரூபாய். 250 மற்றும் மூன்றாவது கேள்விக்கு ரூபாய். 100 பரிசுகள் வழங்கப்படும். உங்கள் கேள்விகள் அனுப்ப வேண்டிய வாட்ஸப் எண்#. 9176541031 |