என்.கே.மூர்த்தி பதில்கள்.
இடஒதுக்கீடு ஏன் அவசியம்? – என்.கே.மூர்த்தி பதில்
தருண்- அம்பத்தூர்
கேள்வி- “பணம்” மதிப்பை இழந்த தருனம் ஏதாகிலும் இருக்கிறதா?
பதில்- கைவசம் ஒரு உண்மை சம்பவம் இருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கருணா என்கிற ஒரு தொழிலதிபர் இருக்கிறார். அவருக்கு நிறைய பள்ளிகள், கல்லூரிகள் இருக்கிறது. அவருடை டாக்டர் அக்கா கவிதாவிற்கு திருமணம் முடிந்து 10 ஆண்டுகள் கழித்து இரட்டை குழந்தை பிறந்தது.
சென்னை அப்பொலோ மருத்துவமனையில் குழந்தை பிறந்திருக்கிறது என்ற தகவல் அறிந்து கருணா மிகுந்த மகிழ்ச்சியுடன் கிளம்பினார். போகும் வழியில் அவருக்கு ஒரு போன் வந்தது, அதில் இரட்டை குழந்தையில் ஒரு குழந்தை இறந்து விட்டதாக தகவல் வந்தது.
தொழிலதிபர் கருணா மிகுந்த வேதனை அடைந்தார். உயிருடன் இருக்கும் இன்னொரு குழந்தையை பாதுகாப்போடு, கண்ணுங்கருத்துமா போற்றி பாதுகாத்து வளர்த்து வந்தனர். அந்த குழந்தைக்கு மூன்று வயதானபோது குலதெய்வம் கோயிலான மேல்மலையனூர் கோயிலில் காது குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
குடும்ப உறவினர்கள் ஆடு, கோழி விருந்துகளுடன் தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தாய் மாமன் கருணா மடியில் குழந்தையை உட்கார வைத்து காது குத்தப்பட்டது. காது குத்து நிகழ்ச்சி முடிந்ததும் எல்லோரும் உணவு சாப்பிடுவதிலும், பரிமாறுவதிலும் பரபரப்பாகி விட்டார்கள்.
திடீரென குழந்தை எங்கே? உன்னிடம் தான் இருந்தது, இல்லை இல்லை அவரிடம் இருந்தது. கடைசியில் குழந்தை காணவில்லை. அன்றைய நாள் மேல்மலையனூர் கோயில் திருவிழாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூட்டம் அலைமோதியது. குழந்தையை எங்கே தேடுவது? எப்படி தேடுவது? என்று தெரியாமல் உறவினர்கள் எல்லோரும் ஆளுக்கொரு திசையில் ஓடினார்கள், தேடினார்கள்.
அங்கு ஒரு இடத்தில் வித்தை காட்டிக் கொண்டிருப்பவரை சுற்றிலும் ஏராளமானோர் குழுமியிருந்தனர்.
சாட்டை அடித்துக் கொண்டு ரத்தம் ஒழுக ஒழுக ஒருவர் ஒரு குழந்தை முன்னாடி வித்தைக் காட்டிக் கொண்டிருந்தார். அந்த குழந்தை கையில் ஒரு வாழைப் பழத்தை கொடுத்து அழுகையை நிறுத்த விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தார். அந்த குழந்தையை கண்டதும் கர்ணா நிம்மதியாக பெருமூச்சு விட்டார்.
குழந்தை உங்கள்தா சார்? சார், கும்பல்ல குழந்தையை பத்திரமா பாத்துக்கோங்க சார் என்றார் சாட்டை காரர். அப்படியே நின்ற கர்ணா, தன் மணிபர்ஸில் இருந்த மொத்த 2000 ரூபாய் நோட்டுகளையும் எடுத்து நீட்டினார். அதில் குறைந்தது 30 நோட்டுகளுக்கு குறைவில்லாமல் இருக்கும்.
அந்த பணத்தை அப்படியே தள்ளிவிட்ட அந்த சாட்டைகாரர், குழந்தையை பார்த்துக்கிட்டதற்கு எல்லாம் காசு கொடுக்கிறீங்க, போங்க சார் என்று சொல்லிவிட்டு அலட்சியமாக சென்றார். கர்ணா அப்படியே ஆடிபோய் விட்டார். ”பணம் தன் மதிப்பை இழந்த இடம் என்பது இதுதான்.”
அதேபோன்று ”தான் கொடுக்கும் ஒத்த ரூபாய் கூட ஒருவரின் பசியை போக்கும் என்றால் பணம் அந்த இடத்தில் தன் தகுதியை உயர்த்திக் கொள்கிறது.”
கலையரசி-ஆவடி
கேள்வி- நல்ல பண்பானவர் என்று அடையாளம் காண்பது எப்படி சார்?
பதில்- இதுவும் உண்மை சம்பவம் தான்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் துரூர் என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் அண்ணனுக்கு வயதாகி பார்வையும் இழந்து விட்டார். தம்பியின் பராமரிப்பில் தான் வாழ்ந்து வருகிறார்.
இருந்தும் அவப்போது வீட்டை விட்டு அண்ணன் வெளியேறி காணாமல் போவதும், பின்னர் அவரை தேடி கண்டுபிடித்து அழைத்து வந்து பாதுகாப்பது மாக தம்பி செய்து வருகிறார்.
அதேபோல் தம்பிக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருக்கிறது. ஒவ்வொரு முறை புகை பிடிக்கும் போதும் அண்ணனிடம் இருந்து கொஞ்ச தூரம் தள்ளி நின்று தான் புகை பிடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
இதை கவனித்து வந்த தம்பியின் நண்பர், உங்க அண்ணனுக்கு தான் கண்ணு தெரியாதே, பின்னர் எதற்கு தூரமாக சென்று புகை பிடிக்கிறீர் என்று கேட்டார்.
அதற்கு தம்பி, எனக்கு கண்கள் நல்லாவே தெரியுதே என்றார். இதுதான் ஒருவரின் உயர்ந்த பண்பு என்று போற்றப்படுகிறது.
கார்த்திக் – திருமுல்லைவாயல்
கேள்வி- “அன்பு” என்றால் என்ன?
பதில்- “அன்பு” என்பது மிகவும் உயர்ந்தது. முதலில் அன்பைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இருக்க வேண்டும். அப்பொழுது தான் அன்பைப் பற்றி உணரமுடியும். எதுவெல்லாம் அன்பு இல்லையோ அதை முதலில் அறிந்துக் கொள்ள வேண்டும்.
நம்மிடம் இருக்கும் வெறுப்பு, கோபம், பொறாமை போன்றவை இருக்கும்போது அன்பு இருக்காது. இதுவெல்லாம் இருக்கும் இ்டத்தில் அன்பு இருக்காது என்பது எல்லோருக்கும் தெரியும். ஒருவர் மீது வன்மத்தை காட்டும்போது அந்த இடத்தில், அந்த நேரத்தில் அன்பு வராது.
அதேபோன்று உங்களிடத்தில் அன்பு இருக்கும் போது கோபம்,பொறாமை, வன்மம், வெறுப்பு என்று எதுவும் வராது. அன்பு இருந்தால் அந்த இடம் மகிழ்ச்சியில் மூழ்கியிருக்கும்.
அன்னை தெரசா தான் நடத்திவந்த ஆசரமத்திற்கு நிதி உதவி கேட்டு ஒவ்வொரு கடையாக வணிகர்களை சந்தித்து உதவி கேட்டு வந்தார். அதில் ஒரு வணிகர் அன்னை தெரசாவை கோபமாக பேசி, எச்சை துப்பி அவமானப்படுத்தினார்.
ஆனால் அன்னை தெரசா சிறிதும் கோபப்பட வில்லை. உங்களிடம் கோபம் இருப்பதைப் போல் நல்ல குணமும் இருப்பதை நான் அறிவேன். உங்கள் கோபத்தை எனக்கு கொடுத்ததைப் போன்று உங்கள் குணத்தை எங்கள் ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளுக்கு வழங்குங்கள், அந்த உதவி எங்கள் குழந்தைகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்று அன்புடன் கேட்டார். அந்த வணிகர் அந்த நிமிடத்தில் மனம் மாறி அன்னை தெரெசாவிற்கு நிதி உதவி செய்தார்.
தினகரன்- பாடி
கேள்வி- மனிதனின் தேசிய குணம் என்று ஏதாகிலும் இருக்கிறதா?
பதில்- நமது தேசிய விலங்கு – புலி, தேசிய பறவை – மயில், தேசிய மலர் – தாமரை, அதே போன்று நமது தேசிய குணம் – “பொறாமை”. இதுதான் உலகம் முழுவதும் மனிதர்களிடம் இருப்பது.
கண்ணன்- ஆவடி
கேள்வி- இடஒதுக்கீடு ஏன் அவசியம்?
பதில் – முன்னாள் பிரதமா் வி.பி.சிங் அவா்கள் நாடாளுமன்றத்தில் மண்டல் கமிஷன் அறிக்கையை படித்தப்போது ஒரு கதை சொன்னாா். ஒரு குடும்பத்தில் அப்பா இறந்து போனாா். இருக்கின்ற சொத்தை பிரித்துக் கொள்வது என்று இரண்டு சகோதரர்கள் முடிவு செய்தனா்.
அவர்களிடம் ஒரே ஒரு பசு மாடு மட்டும் இருந்தது. அதை அண்ணன் தம்பி இருவரும் சமமாக பிரித்துக்கொள்வது என்று முடிவு செய்தனர். தம்பி, அண்ணன் சொல்வதை மறுக்காமல் கேட்டுக் கொள்ளக் கூடியவா்.
தம்பி, பசு மாட்டின் முன்பகுதி புனிதமானது அது உனக்கு சொந்தமாக வைத்துக்கொள். மாட்டின் பின்பகுதி அசுத்தமானது. அதை நான் வைத்துக் கொள்கிறேன் என்று அண்ணன் கூறினார்.
தினமும் காலையில் எழுந்திருக்கும் தம்பி, மாட்டிற்கு தீவணம் வைப்பது, தண்ணீர் வைப்பது என்று கடமை தவறாமல் செய்து வந்தாா். அதேபோல் அண்ணனும் காலையில் எழுந்ததும் மாட்டின் பின்பகுதியில் பால் கரந்து வியாபாரம் செய்வது, சாணம் அள்ளி எருவாக்கி வியாபாரம் செய்வது என்று தனது வாழ்க்கையை செழுமையாக வாழ்ந்து வந்தாா்.
அண்ணனை எதிர்த்து தம்பி ஒரு கேள்வியும் கேட்டது கிடையாது. அப்படி கேட்டால் அது பெரும் பாவச் செயல் என்று சொல்லப்பட்டிருந்தது. இப்படிதான் நமது நாட்டில் உயா்ந்த சாதி அண்ணன்கள் ஏமாற்றி வாழ்ந்து வருகிறாா்கள் என்று வி.பி.சிங் கூறினார்.
கல்யாணி – பட்டாபிராம்
கேள்வி – சாணி சமத்து என்றால் என்ன?
பதில்- கிராமங்களில் பசு சாணத்தை எடுத்து அதை விநாயகர் உருவம் பிடித்து, அதில் மஞ்சள், குங்குமம் தடவி, மேலே அருகம் புல் சொருகி வாசலில் வைப்பார்கள். அல்லது விளைந்து குவித்து வைத்துள்ள தாணியங்கள் மீது வைத்து வணங்குவார்கள்.
இப்படி பிடிக்கப்பட்ட விநாயகரை சிறிது நேரத்திற்கு பிறகு தூக்கிப்போட்டு விடுவார்கள். ஆனால் விநாயகர் என்று கும்பிட்ட அந்த சாணத்தில் மட்டும் கரையானோ, வண்டோ அரிக்காது.
தெருவில் கிடக்கும் சாணத்தில் வண்டு, கரையான் குடியேறி, அதை சாப்பிடும்.
விநாயகர் என்று நாம் உருமாற்றி விட்ட அந்த சாணத்தில் கரையான் சேட்டை செய்யாது. இதை கடவுள் நம்பிக்கைக்கு உதாரணமாக பேசுவார்கள்.
ஒரு குழந்தையை சிறிய வயதில் இருந்து குழந்தைக்கு தேவையான கல்வியை கொடுத்து, அறிவோடு வளர்த்து வந்தால் அந்த குழந்தை பெரியவனானதும் சிந்தித்து சாமார்த்திய மனிதனாக நிற்பான். அவனிடம் காத்து, கருப்பு என்று எதுவும் அருகில் கூட நெருங்க முடியாது.
அதைதான் சாணி சமத்து என்று சொல்கிறார்கள். அதே குழந்தைக்கு கல்வியை கொடுக்காமல், சிந்திக்கும் ஆற்றல் இல்லாமல் இருந்தால் அந்த குழந்த வளர்ந்து பெரியவனானதும் “கண் இருந்தும் குருடாக, எடுப்பார் கைப்பிள்ளை போல்” மற்றவர்களின் கட்டுப்பாட்டில் தான் வாழ்வார்கள். அதாவது தெருவில் கிடக்கும் சாணம், கரையானுக்கு இறையாகுவதை போன்று.
ஆனால் அந்த பிள்ளையாரில் உள்ள மர்மமத்தை சொல்கிறேன்.
சாணியில் பிடிக்கப்பட்ட பிள்ளையாரில் மஞ்சள்,குங்குமம் கலக்காமல், அருகம் புல் சொருகாமல் ஒரு பிள்ளையாரை பிடித்து பாருங்கள். அந்த பிள்ளையாரை கரையான் அரிக்கும், வண்டு உருண்டை பிடிக்கும்.
மஞ்சள் இருக்கும் இடத்தில் கரையான், வண்டு வராது. அதனால் சாணியால் பிடிக்கப்பட்ட பிள்ளையாருக்கும் கடவுளுக்கும் தொடர்பு இல்லை. மஞ்சளின் மகமை, அருகம் புல் சாரின் சக்திதான் காரணம்.
கணேஷ் – ஆவடி
கேள்வி- அ.இ.அ.தி.மு.க. வை பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்- 1970 ல் திமுக வில் கலைஞர் கருணாநிதிக்கு எதிராகவும், திமுக வை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்றும் ஒரு கூட்டம் சதி திட்டம் தீட்டியது. அந்த சதிகார கும்பலில் தெரிந்தோ தெரியாமலோ சிக்கிக்கொண்டார் எம்ஜிஆர்.
கலைஞருக்கும், எம்ஜிஆருக்கும் நெருங்கிய நட்பு இருந்துவந்தது. எம்ஜிஆர், சிவாஜி ஆகியோரை சினிமாவில் அறிமுகப்படுத்தி அவர்களின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியவர் கலைஞர்.
அதனால் 1969ல் கலைஞர் முதலமைச்சர் ஆனபோது அவருக்கு எம்ஜிஆர் மிகவும் உறுதுணையாக இருந்தார். அப்படிப்பட்ட எம்ஜிஆர், சிலரின் சூழ்ச்சியில் சிக்கி, கலைஞருக்கு துரோகம் செய்துவிட்டு 1972ல் அதிமுக வை தொடங்கினார்.
அதன் பின்னர், எம்ஜிஆர் உயிரோடு இருக்கும் போதே அவருக்கு எதிராக ஜெயலலிதா ராஜீவ்காந்தி மூலம் அதிமுக வை கைப்பற்ற துடித்தார்.
எம்ஜிஆருக்கு துரோகம் செய்துவிட்டு அந்த இடத்தை கைப்பற்ற ஜெயலலிதா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஒருவழியாக எம்ஜிஆர் மறைந்தார். ஜெயலலிதாவின் ஆசை நிறைவேறியது.
அதனை தொடர்ந்து சசிகலா அந்த கட்சியை கைப்பற்ற ஜெயலலிதா விற்கு எதிராக பல துரோக வலைகளை பின்னினார். ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் ஓபிஎஸ்- ஐ நீக்கினார், பொது செயலாளராக பொறுப்பேற்றார்.
ஜெயலலிதாவைப் போல் உடை அணிந்தார், நடந்தார். சிறிது நாட்களில் சிறைக்கு சென்றார். அப்போது சின்னம்மா சசிகலா, எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் நாற்காலியில் அமரவைத்தார்.
அதற்கடுத்து சசிகலா, ஓபிஎஸ் இருவருக்கும் அல்வா கொடுத்துவிட்டு எடப்பாடி பழனிச்சாமி இன்று பொதுச் செயலாளராக பதவியேற்று கம்பீரமாக நிற்கிறார்.
அதிமுக வரலாறு என்பது துரோகம் ! துரோகம் ! என்று துரோகத்தின் மொத்த வரலாறு. அந்த துரோகத்தை தான் அரசியலில் ராஜதந்திரம் என்று போற்றப்படுகிறது.
அசாருதீன்- ஆவடி
கேள்வி- அண்ணா, பாலியல் தொடர்பு குறித்து உங்கள் கருத்து?
பதில்- தம்பி, என் கருத்து என்று பெரிதாக எதுவும் இல்லை. ஆனால் நெப்போலியன் ஹில் என்ற மனோத்தத்துவ அறிஞர் சொல்லியுள்ள கருத்தை உங்களுக்கு தருகிறேன்.
பாலுணர்வு மூன்றுவிதமான சக்திகளை கொண்டது.
1. மனித இனத்தை நிரந்தரமாக இருக்கச் செய்வது.
2. மனிதனின் ஆரோக்கியத்தை நிலைநிறுத்துவது (பாலுணர்வு ஆரோக்கியத்திற்கு சிறந்த மருந்து)
3. பாலுணர்வு சிந்தனை உள்ளவர்களை உருமாற்றத்தின் மூலம் மேதைகளாக்கும்.
மனித இச்சைகளில் மிகவும் சக்தி வாய்ந்தது பாலியல் இச்சை. ஒருவர் பாலியல் இச்சையில் இருக்கும்போது கற்பனை திறன் கூர்மையடைகிறது. தைரியம், மனவலிமை, விடாமுயற்சி, கற்பனை மற்றும் படைப்பாற்றல் ஆகியவை மற்ற நேரங்களைவிட அப்பொழுது கூர்மையடைகிறது.
தன் உயிரையும், மரியாதையும் துச்சமாக மதித்து அவற்றை பணயம் வைக்கிற அளவிற்கு வலிமையாக இருப்பது அந்த இச்சை.
அந்த இச்சையை மட்டும் கட்டுப்படுத்தி, அதனை வேறு துறைகளில் செலுத்த முடியுமானால், அந்த ஊக்கமூட்டும் சக்தியானது அதிக வலிமை மிகுந்தாக மாறி அந்த மனிதரை சாதனையாளராக மாற்றிக் கொடுக்கும்.
தம்பி அசாருதீன் அவர்களே, நீங்களும் கொஞ்சம் எல்லாவற்றையும் கட்டுப்படுத்திக் கொண்டு சாதனையாளராக மாற வேண்டும்.
சங்கர்– கோயில் பதாகை.
கேள்வி – மதம் என்றால் என்ன?
பதில்- ஆன்மீக சொற்பொழிவாளர் சுகி.சிவம் அவர்கள் அடிக்கடி சொல்லும் வாசகம். “மதம் என்பது மனிதன் இறைத்தன்மையை அடைவதற்காக ஏற்படுத்தப்பட்ட வழிமுறை”. அதாவது இறைத்தன்மை என்பது வீடு போன்றது. அந்த வீட்டிற்கு அழைத்து செல்லும் சாலை தான் “மதம்” . எப்படி சாலை ஒரு போதும் வீடாகாதோ அதுபோல் மதம் கடவுள் அல்ல என்ற புரிதல் நமக்கு வேண்டும்.
நம்மைப் போன்ற சிலரை மதம் பிடித்து வைத்திருக்கிறது. வெளியே போகமுடியாமலும் உள்ளே இருக்க முடியாமலும் இருந்து வருகிறோம். சிலருக்கு மதம் தேவை இருக்கிறது. அதன் மூலம் இறைவனை தேடி ஆறுதல் பெறுகிறார்கள்.
இன்னும் சிலருக்கு மதம் பிடித்து அலைந்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தான் ஆபத்தானவர்கள். இவர்களிடம் தான் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தேவராஜ்- ரெடில்ஸ்
கேள்வி- ராகுல்காந்தி சிறைக்கு போவாரா? மாட்டாரா?
பதில்- ராகுல் காந்தி சிறைக்கு போக வேண்டுமா? வேண்டாமா? நீங்கள் சொல்லுங்கள்.
அன்புள்ள APC NEW TAMIL வாசகர்களுக்கு வணக்கம். மேலும், இதில் இடம் பெறுகின்ற கேள்விகளில் முக்கியமான மூன்று கேள்விகள் தேர்வு செய்து அதில் முதல் கேள்விக்கு ரூபாய். 500, இரண்டாவது கேள்விக்கு ரூபாய். 250 மற்றும் மூன்றாவது கேள்விக்கு ரூபாய். 100 பரிசுகள் வழங்கப்படும். உங்கள் கேள்விகள் அனுப்ப வேண்டிய வாட்ஸப் எண்#. 9176541031 |