ரஷ்ய வான் பாதுகாப்பு 10 பகுதிகளி 337 உக்ரைனின் ட்ரோன்களை ஒரே இரவில் இடைமறித்துள்ளது. இது மூன்று ஆண்டுகளில் ரஷ்யா மீதான மிகப்பெரிய உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர். மூன்று ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் சவுதி அரேபியாவில் அமெரிக்க அதிகாரிகளுடன் ஒரு உக்ரைன் தூதுக்குழு முக்கியமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்தது.
ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ள குர்ஸ்க் பகுதியில் உக்ரைனின் 126 ட்ரோன்கள் சுட்டுவீழ்த்தப்பட்டதாகவும், 91 ட்ரோன்கள் மாஸ்கோ பகுதியை குறி வைத்ததாகவும் அமைச்சகம் விவரித்தது. தலைநகருக்குச் செல்லும் வழியில் 70 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் நடுநிலையாக்கப்பட்டதாகவும், ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் கூரைக்கு சிறிய சேதம் ஏற்பட்டதாகவும் மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் உறுதிப்படுத்தினார்.
ஆளுநர் ஆண்ட்ரி வோரோபியோவ், மாஸ்கோ பகுதியில் ஒருவர் உயிரிழந்ததாகவும், ஒன்பது பேருக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும், வீடுகள், கார்களுக்கு சேதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பிற பகுதிகளில் பெல்கோரோட், பிரையன்ஸ்க் போன்ற எல்லைப் பகுதிகளும், கலுகா, ரியாசான் போன்ற உள்நாட்டு மண்டலங்களும் அடங்கும். இந்த தாக்குதலால் டோமோடெடோவோ மற்றும் ஷெரெமெட்டியோ உள்ளிட்ட ஆறு விமான நிலையங்களின் சேவைகள் நிறுத்தப்பட்டன. மேலும் டோமோடெடோவோ அருகே ரயில் சேவைகள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டன.
இந்த தாக்குதல் சவுதி அரேபியாவில் போரை தடுத்து நிறுத்தும் இராஜதந்திர அமைதி பேச்சுவார்த்தைக்கு இடையே நடைபெற்றுள்ளது. சவுதி அரேபியாவில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவும் அவரது குழுவும் உக்ரைன் அதிகாரிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் முன் நடைபெற்றது. அப்போது உக்ரைன் கருங்கடல் போர்நிறுத்தம், நீண்ட தூர தாக்குதல்களில் வரம்புகள் மற்றும் கைதிகளை விடுவித்தல் ஆகியவற்றை முன்மொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் உக்ரைனின் அரிய மண் தாதுக்களுக்கான அமெரிக்க ஒப்பந்தத்தையும் எதிர்பார்க்கிறது. இதற்கே ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்னுரிமை அளித்து வருகிறார். சவுதி அரேபியாவுக்கு செல்லும் வழியில் ரூபியோ ஒரு திறந்த அணுகுமுறையை வலியுறுத்தினார். ரஷ்யாவின் நிலைப்பாட்டுடன் ஒப்பிட்டு, விதிமுறைகளை விதிக்காமல் உக்ரைனின் நெகிழ்வுத்தன்மையை அளவிடுவதே அமெரிக்காவின் நோக்கம் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
ட்ரோன்கள் தாக்கியபோது, உக்ரைன் அதிகாரப்பூர்வமாக அமைதியாக இருந்தது. ரஷ்யாவிற்குள் ஆழமாக ஊடுருவிய இந்தத் தாக்குதல், உக்ரைனின் அதிகரித்து வரும் ட்ரோன் திறன்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது இப்போது மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் போரை வலுவாக்கும் போக்கில் நடத்தப்பட்ட தாக்குதலாக கருதப்படுகிறது. சவுதி பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு பதட்டமான பின்னணியை அமைக்கிறது.