Homeசெய்திகள்‘என் மகனின் வாழ்க்கையை சீரழித்து விட்டார்கள்’:தோனி- கோலி மீது சஞ்சு சாம்சன் தந்தை புகார்

‘என் மகனின் வாழ்க்கையை சீரழித்து விட்டார்கள்’:தோனி- கோலி மீது சஞ்சு சாம்சன் தந்தை புகார்

-

மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலியால் தன் மகனின் கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக சஞ்சு சாம்சனின் அப்பா விஸ்வநாத் சாம்சன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னைக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றி!

இந்தியாவில் கிரிக்கெட் ஆடவந்து பல ஆண்டுகளாகியும் அணியில் நிரந்தரமாக இடம் கிடைக்காமல் இருப்பவர்களில் சஞ்சு சாம்சனும் ஒருவர். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாக இருக்கும் சஞ்சு சாம்சன், ஒவ்வொரு ஆண்டும் அந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். ஆனால் இந்திய அணியில் நிரந்தரமாக இடம் கிடைக்காமல் உள்ளேயும் வெளியேயுமாக ஆடிக்கொண்டு இருக்கிறார்.

கடந்த 2015-ம் ஆண்டுமுதல் சர்வதேச போட்டிகளில் ஆடிவரும் சஞ்சு சாம்சன், 36 டி20 போட்டிகளில் 701 ரன்களையும், 16 ஒருநாள் போட்டிகளில் 510 ரன்களையும் எடுத்துள்ளார். இந்த சூழலில் சமீபமாக வங்கதேசம் மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டிகளில் அவர் அடுத்தடுத்து சதம் அடித்தார். இதன்மூலம் அவர் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் சஞ்சு சாம்சனுக்கு அணியில் நிலையான இடம் கிடைக்காததற்கு மகேந்திர சிங் தோனி, ராகுல் திராவிட் மற்றும் விராட் கோலிதான் காரணம் என்று சஞ்சு சாம்சனின் அப்பா விஸ்வநாத் சாம்சன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மலையாள பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘‘என் மகனின் முதல் 10 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டதில் 3 முதல் 4 நபர்களுக்கு பங்கு இருக்கிறது. மகேந்திர சிங் தோனி, ராகுல் திராவிட், விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரால்தான் என் மகனின் முதல் 10 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அவர்கள் நால்வரும் என் மகனின் 10 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையை அழித்துவிட்டனர்.

சஞ்சு சாம்சனுக்கு சரியான வாய்ப்புகளை வழங்காமல், அவர்கள் அவனை புண்படுத்திவிட்டனர். அவர்கள் எந்த அளவுக்கு புண்படுத்தினார்களோ, அதைவிட வலிமையாக என் மகன் மீண்டு வந்தான். வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியில் என் மகன் சதம் அடித்தான். அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான ஸ்ரீகாந்த், அவன் வங்கதேசத்துக்கு எதிராகத்தானே சதம் அடித்தான் என்று கிண்டலாக கூறினார்.

யாருக்கு எதிராக அடித்தால் என்ன? சதம் சதம்தானே? இதே ஸ்ரீகாந்த் வங்கதேசத்துக்கு எதிராக 26 ரன்களைத்தான் எடுத்திருக்கிறார். சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட் ஆகியோருக்கு இணையான கிளாசிக்கான பேட்டிங் திறமை சஞ்சு சாம்சனுக்கு இருக்கிறது. அதை மதிக்க வேண்டும்’’ எனக் கூறினார். இது கிரிகெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

MUST READ