எழுத்தாளர் சுகுணா திவாகர்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெளிவான கொள்கை இல்லாமல் முட்டு சந்தில் நிற்பதாக எழுத்தாளர் சுகுணா திவாகர் விமர்சனம் செய்துள்ளார்.
‘நாம் தமிழர் கட்சி முன்வைப்பது தமிழ்த்தேசியமே அல்ல’ என்பதுதான் என் கருத்து. ‘சீமான் முன்வைப்பது தமிழ்த்தேசியம் என்றால் அவர் இந்திய தேசியத்தை ஏற்கிறாரா, மறுக்கிறாரா’ என்பதுதான் என் கேள்வி. ஒருவர் இந்திய தேசியத்தை ஏற்றுக்கொண்டே ‘நான் ஒரு தமிழ்த்தேசியவாதி’ என்று சொன்னால் அவருக்குத் தேசியம், தேசிய இனம் குறித்து எந்தப் புரிதலும் கிடையாது என்றுதான் பொருள்.
தேசிய இனத்தின் நான்கு அம்சங்கள் குறித்த ஸ்டாலின் வரையறை, ஸ்டாலின் வரையறைக்கும் அப்பால் இருக்கும் தேசிய இனத்தின் அடிப்படைகள், தேசியம் என்பது முதலாளித்துவக்கோரிக்கையா பாட்டாளிவர்க்கக் கோரிக்கையா, தேசிய முதலாளிகளின் தன்மை மற்றும் தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் அவர்களின் பங்கு, இந்தியாவில் / தமிழ்நாட்டில் தேசிய முதலாளிகள் என்பவர்கள் யார் என்று உலகளவிலும் தமிழ்நாட்டிலும் பல்வேறு கோட்பாட்டுரீதியான விவாதங்கள் நடைபெற்றிருக்கின்றன. ‘தேசியம் ஒரு கற்பிதம்’ என்ற பெனடிக்ட் ஆன்டர்சனின் கருத்தை ஏற்றும் மறுத்தும் பல்வேறு விவாதங்கள் தமிழ்நாட்டிலேயே நடைபெற்றிருக்கின்றன. எனக்குத் தெரிந்து இப்படியான எந்தக் கோட்பாட்டு விவாதத்தையும் நாம் தமிழர் கட்சி முன்னெடுத்ததும் இல்லை; பங்களித்ததும் இல்லை.
நாம் தமிழர் கட்சி முன்வைக்கும் ‘தமிழ்த்தேசியம்’ குறித்து கேள்வி கேட்டால் பதிலுக்கு பெரியார், தி.மு.கவைக் குற்றம் சாட்டி நான்கு கேள்விகள் கேட்பது அல்லது கேள்வி கேட்பவர் எந்தச் சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரைத் ‘தெலுங்கர்’ என்று முத்திரை குத்துவது – இதுமட்டும்தான் ‘நாம் தமிழர்’ கட்சியின் ஒரே விவாத அணுகுமுறை.
தேசியம் என்பது தேசிய இனத்தின் இறையாண்மை தொடர்பான கருத்தியல். ஒன்று தேசிய இனத்தின் விடுதலை கோரப்பட வேண்டும் அல்லது பல்வேறு தேசிய இனங்கள் இணைந்து ஒரு கூட்டமைப்பு உருவானால் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தவேண்டும். தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியத்தை முன்வைத்த பாவலரேறு பெருஞ்சித்திரனார், தோழர்கள் தமிழரசன், தியாகு, பொழிலன், கார்முகில் இன்னும் சொல்லப்போனால் நாம் தமிழர் கட்சியின் இப்போதைய அரசியல் ஆசான் பெ.மணியரசன் வரை இதைத்தான் ‘தமிழ்த்தேசியமாக’ முன்வைத்திருக்கிறார்கள். இப்போது சொல்லுங்கள் நாம் தமிழர் கட்சியின் ‘தேசியக் கோரிக்கை’தான் என்ன?
மேற்கண்ட தமிழ்த்தேசியவாதிகளுக்குத் திராவிடக்கட்சிகள் மீது விமர்சனங்களும் கோபங்களும் இருக்கலாம்; இந்திய தேசியத்தை ஏற்றுக்கொண்ட, அனைத்திந்தியப் புரட்சியைப் பேசிய கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவர்களைத் திட்டுவதை மட்டுமே அவர்கள் ‘தேசியமாக’ முன்வைக்கவில்லை. அவர்களின் முதன்மை எதிரி இந்திய தேசியம்; முதன்மை இலக்கு தமிழ்த்தேசிய விடுதலை/ சுயநிர்ணய உரிமை.
நாம் தமிழர் கட்சி சொல்வதைப்போல் திராவிடமும் திராவிடக் கட்சிகளும் தமிழர் அடையாளத்தை மறைத்துவிட்டன, ஈழப்படுகொலைகளுக்குத் துணைநின்றன என்பதை ஒரு வாதத்துக்காக ஏற்றுக்கொள்வோம். ஆனால் இங்கே தேசக்கட்டமைப்பு என்பது இந்திய தேசியம்தானே, உங்கள் வாதப்படி ‘ஈழ இனப்படுகொலையை முன்னின்று நடத்தியது இந்திய தேசிய அரசு’ தானே, திராவிடக்கட்சிகள் என்பது இந்த இந்தியக் கட்டமைப்பில், அரசியல் சட்டம், டெல்லி அதிகாரம், ஆளுநர், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் அழுத்தத்தின்கீழ், வரையறுக்கப்பட்ட அதிகாரத்தைக் கொண்ட மாநிலக்கட்சிகள்தானே?
திராவிடக்கட்சிகளை வசைபாடுவதைத் தாண்டி, எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருக்கிற இந்திய தேசியத்தை எதிர்த்து ‘நாம் தமிழர் கட்சி’ என்ன செய்தது என்பதுதான் என் கேள்வி. நா.த.க தன் தலைவர்களாக முன்வைக்கிற பசும்பொன் முத்துராமலிங்கனார், காமராசர், பாரதியார், ம.பொ.சி, கக்கன் என அனைவரும் இந்திய தேசியவாதிகள். வசைபாடுவதோ நீங்களே சொல்வதன்படி ‘கடைசிவரை தனித்தமிழ்நாடு கேட்ட ‘ஐயா’ பெரியார்’. அப்படியானால் நீங்கள் யார், உங்கள் தேசியம் எத்தன்மை வாய்ந்தது?
நான் அறிந்தவரை ‘தமிழ் பேசும் சாதியைச் சேர்ந்த ஒருவர் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர் ஆனால் போதும்’ என்பதுதான் ‘நாம் தமிழர் கட்சி’யின் வினோத தமிழ்த்தேசியம்.
சரி, அதையும்கூட ஒரு வாதத்துக்கு ஏற்றுக்கொள்வோம். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை விட்டுவிடுவோம். உங்கள் வரையறையின்படி ‘தமிழரான’ காமராசர் காலத்தில்தானே நாம் எல்லைப்பகுதிகளை இழந்தோம், ‘தமிழரான’ பக்தவச்சலம் ஆட்சியில் ‘தமிழரான’ கக்கன் அமைச்சராகப் பொறுப்பு வகித்த காவல்துறைதானே இந்தி எதிர்ப்புப் போராளிகளைச் சுட்டுக்கொன்றது என்றால் ‘சீமான் போன்ற ஒருவர் முதலமைச்சர் ஆனால் எல்லாம் சரியாகும்’ என்பதுதான் ‘நாம் தமிழர் கட்சி’யின் வாதம். உலகத்திலேயே ஒரு தனிநபர் பதவியில் அமர்வதைத் தேசியம் என்று சொன்ன ஒரே இயக்கம் ‘நாம் தமிழர் கட்சி’தான்.
சரி, ‘தமிழ் பேசக்கூடிய சாதியைச் சேர்ந்த ஒருவர்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகவேண்டும் என்று இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்தவேண்டும்’என்றாவது நாம் தமிழர் கட்சி கோருகிறதா என்றால் அதுவும் இல்லை. ‘தமிழ்நாட்டுக்கு மாநிலத் தன்னாட்சி தருவதற்கு இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும்’ என்பதுதான் நாம் தமிழர் கட்சியின் கோரிக்கை.
தி.மு.க மாநில சுயாட்சி என்று சொல்வதைக் கொஞ்சம் தமிழ்ப்படுத்தி மாநிலத் தன்னாட்சி என்கிறது நாம் தமிழர் கட்சி.
8 சதவீதம் வாக்குகள் வாங்கி அங்கீகரிக்கப்பட்டது ‘மாநிலக்கட்சி’யாக, கேட்பது ‘மாநிலத் தன்னாட்சி’, எதிர்ப்பது திராவிடத்தை மட்டும்தான் இந்திய தேசியத்தை அல்ல, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாற்றிப் பாடுவதற்கு உள்ள தைரியம் (இந்திய) தேசிய கீதத்தைக் கேள்வி கேட்பதில் இல்லை.
பிறகு என்ன ‘தமிழ்த்தேசியம்’ ? விஜயாவது கருவாட்டுச் சாம்பார் வைத்தார்; சீமானிடம் இருப்பதோ கருவாடும் இல்லாத சாம்பாரும் இல்லாத காலி பானை. விஜய்யாவது நடுச்சாலையில் இருக்கிறார். சீமான் நிற்பதோ எந்த ஊருக்கும் பயணம் போகாத முட்டுச்சந்து.
நீங்கள் கேட்ட கேள்விக்கு வருகிறேன். தேசியம் என்பதற்கான மேற்சொன்ன வரையறையின்படி விடுதலைச்சிறுத்தைகள் முன்வைப்பதும் ‘தமிழ்த்தேசியம்’ இல்லையா’ என்று கேட்டால் ஆமாம் விடுதலைச்சிறுத்தைகள் முன்வைப்பதன் பெயரும் தமிழ்த்தேசியம் இல்லை. தேசிய இனம், தேசியம் குறித்த கோட்பாட்டுப் புரிதல் உள்ள யாரும் இதைத் தமிழ்த்தேசியமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.