பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கில்லர் பவுலிங்கை வீசி ஐசிசி பந்து வீச்சாளர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மஹாராஜை பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஒருநாள் போட்டித் தரவரிசையில் முதலிடத்துக்குத் திரும்பியுள்ளார். ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷீத் கான் 2ம் இடத்தில் உள்ளார்.
கேசவ் மகாராஜ் இப்போது மூன்றாவது இடத்தில் உள்ளார். ஷாஹீன் நான்காவது இடத்தில் இருந்தார், இப்போது அவர் மூன்று இடங்கள் முன்னேறி முதல் இடத்தைப் பிடித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் ஷஹீன் அப்ரிடி தனது முதல் இடத்தை இழந்தார். தற்போது ஓராண்டுக்கு பிறகு மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
மறுபுறம், இந்தியாவின் முன்னணி பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இந்த பட்டியலில் 10 இடங்குளுக்குள் வந்துள்ளனர். சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நான்காவது இடத்திலும், ஜஸ்பிரித் பும்ரா 6வது இடத்திலும், முகமது சிராஜ் 7வது இடத்திலும் உள்ளனர். ஜஸ்பிரித் பும்ரா தனது கடைசி ஒருநாள் உலகக் கோப்பை 2023 -ல் நவம்பர் 19 அன்று விளையாடினார். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி இதுவாகும். அதன் பிறகு பும்ரா இந்த ஒரு நாள் போட்டியில் விளையாடவில்லை. இதனால் அவருக்கு ஒருநாள் தரவரிசையில் முன்னேற்றம் இல்லை.
ஷாஹீன் அப்ரிடி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் 3 போட்டிகளில் மொத்தம் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது அவருக்கு முதலிடத்தை அடைய உதவியது, மறுபுறம், அவரது சக வீரரும், தொடர் நாயகனுமான ஹரிஸ் ரவுஃப் 3 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் அவரும் அமோக பயன் அடைந்து தற்போது 14 இடங்கள் முன்னேறி 13வது இடத்தை பிடித்துள்ளார்.
பந்துவீச்சில் ஷாஹீன் அப்ரிடி முதலிடத்தை எட்டியதன் அர்த்தம், தற்போது பாகிஸ்தான் வீரர்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளனர். பேட்டிங்கில் பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார். பேட்டிங்கில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இரண்டாம் இடத்திலும் உள்ளார். சுப்மன் கில் 3 இடத்தையும், விராட் கோலி 4ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.