வங்கதேசத்துக்கு எதிரான கான்பூர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 285 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.
வங்கதேசம் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட்
போட்டி கான்பூரில் கடந்த 27ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து வங்கதேச அணி களமிறங்கி முதல் இன்னிங்சை ஆடிய நிலையில், அந்த அணி 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்களை எடுத்திருந்தபோது போதிய வெளிச்சமின்மையால் போட்டி கைவிடப்பட்டது. மேலும், 2 மற்றும் 3ஆம் நாள் ஆட்டங்கள் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டன. இந்த நிலையில், இன்று காலை 4ஆம் நாள் ஆட்டம் தொடங்கிய வங்கதேச அணி இந்தியாவின் அபார பந்துவீச்சில் முதல் இன்னிங்ஸில் 233 ரன்களுக்கு ஆல்
அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக மொமினுல் ஹக் சதம் அடித்து அசத்தினார். இந்திய தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், சிராஜ், அஸ்வின் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே
அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. இதன் மூலம் இந்திய அணி டெஸ்ட்
வரலாற்றில் அதிவேக 50, 100, 150, 200 ரன்களை கடந்து சாதனை படைத்தது. பின்னர் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆக இந்திய அணி 9 விக்கெ ட்டுகளை இழந்து 285 ரன்களை அடித்தபோது, கேப்டன் ரோகித் சர்மா டிக்ளேர் செய்வதாக அறிவித்தார்.
இந்திய அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 72 ரன்களும், ராகுல் 68 ரன்களும் அடித்தனர். இதனால் இந்திய அணி 52 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனை அடுத்து வங்கதேசம் அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆடி வருகிறது. இன்றைய 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 2 விக்கெட் இழப்புக் 26 ரன்கள் எடுத்துள்ளது.