இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சை எதிர் கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
எனினும் வில் யங் மற்றும் டேரில் மிட்செல் இணை சற்று தாக்குப்பிடித்து ரன்களை சேர்த்தனர். சிறப்பாக ஆடிய இருவரும் அரை சதம் அடித்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக டேரில் மிட்சல் 82 ரன்களும், வில் யங் 71 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் அபாரமாக பந்து வீசிய ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.
இதனை தொடர்ந்து, இந்திய அணி, தனது முதல் இன்னிங்சை தொடங்கி ஆடி வருகிறது. கேப்டன் ரோகித் சர்மா 18 ரன்கள் எடுத்து, மேட் ஹென்றி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து, ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால் – சுப்மான் கில் இணை, சிறிது நேரம் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டனர். ஜெய்ஸ்வால் 30 ரன்கள் எடுத்திருந்தபோது அஜாஸ் படேல் பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சிராஜ், கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 19 ஒவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 86 ரன்களை கடந்து ஆடி வருகிறது. கில் 31 ரன்களுடனும், பன்ட் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.