பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் உலக கோப்பை டி20 தொடர் கடந்த 2-ந் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இன்று காலை (இந்திய நேரப்படி) நடைபெற்ற 29வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ஆப்கானிஸ்தான் அணி ரஷித் கான் தலைமையிலும் பப்புவா நியூ கினியா அணியானது ஆசாத் வாலா தலைமையிலும் களம் கண்டன. இந்த ஆட்டமானது வெஸ்ட் இண்டீஸ்சில் உள்ள பிரைன் லாரா கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து பப்புவா நியூ கினியா அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டானி உரா 11 ரன்களிலும் ஆசாத் வாலா 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய லிகா சியாக ரன் ஏதுமின்றியும் சீஸ் பவு ரன் ஏதுமின்றியும் டக் அவுட் ஆகினர். அணியின் அதிகபட்சமாக கிப்ரின் டோரிகா 26 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. பந்துவீச்சு தரப்பில் பசால்ஹக் பரூகி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
பின்னர் 95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரமனுல்லா குர்பாஸ் 11 ரன்களிலும் இப்ராஹிம் சட்ரன் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய குல்பதின் நைப் 49 ரன்களும் அஸ்மதுல்லா ஓமர்சாய் 13 ரன்களும் எடுத்தனர். இறுதியில் அணியானது 15.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழந்து 101 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணியின் ஆட்டநாயகனாக பசால்ஹக் பரூகி தேர்வு செய்யப்பட்டார்.