தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பாரா தடகள வீராங்கனைகளுக்கு மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் அர்ஜுனா விருதை அறிவித்துள்ளது.
2024ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. ஜனவரி 17ம் தேதி காலை 11 மணிக்கு தலைவர் மாளிகையில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் தேசிய விளையாட்டு விருதுகளை வழங்கவுள்ளார். அதன்படி மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் வழங்கியுள்ள விருது பட்டியலில் மல்யுத்தம், நீச்சல், துப்பாக்கி சுடுதல், பேட்மிட்டன், தடகளம், ஹாக்கி, செஸ், குத்துச்சண்டை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற 32 பேருக்கு மத்திய அரசின் உயரிய விருதான அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பாரா பேட்மிட்டன் பிரிவில் மூன்று தமிழக வீராங்கனைகளின் பெயர் இடம்பெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த துளசிமதி முருகேசன் பாரா பேட்மிட்டன் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் வெள்ளி பதக்கத்தை வென்றிருந்த நிலையில் அவருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பாரா பேட்மிட்டன் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த மனிஷா ராமதாஸ்-க்கும் அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாரா பேட்மிட்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற நித்ய ஸ்ரீ சுமதி சிவனுக்கும் மத்திய அரசின் அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 32 பேர் கொண்ட அர்ஜுனா விருது பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த 3 பாரா பேட்மிட்டன் வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.