நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் வங்காள தேச அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் உலக கோப்பை டி20 தொடர் கடந்த 2-ந் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. நேற்றிரவு (இந்திய நேரப்படி) நடைபெற்ற 27வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் வங்காளதேச அணி நஜ்முல் ஹசன் சாண்டோ தலைமையிலும் நெதர்லாந்து அணியானது ஸ்காட் எட்வர்டு தலைமையிலும் களம் கண்டன. இந்த ஆட்டமானது வெஸ்ட் இண்டீஸ்சில் உள்ள அர்னாஸ் வாலே மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்டு முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து வங்காளதேச அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தன்சிட் ஹசன் 35 ரன்களிலும் நஜ்முல் ஹசன் சாண்டோ 1 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய லிட்டன் தாஸ் 1 ரன்களில் ஆட்டமிழக்க மறுபுறம் எதிர்த்து ஆடிய சகிப் ஹல் ஹசன் அதிரடியாக விளையாடி 64 ரன்கள் எடுத்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 159 ரன்கள் எடுத்தது.
பின்னர் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மைக்கேல் லிவிட் 18 ரன்களிலும் மேக்ஸ் ஒடவுட் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய விக்ரமஜித் சிங் 26 ரன்களிலும் சைபிரண்ட் ஏஞ்சல்பிரஜித் 33 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 134 ரன்கள் எடுத்தது. பின்னர் வங்காளதேச அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வங்காளதேச அணியின் ஆட்டநாயகனாக சகிப் ஹல் ஹசன் தேர்வு செய்யப்பட்டார்.