வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரருமான டிவைன் பிராவோ கிரிக்கெட் அனைத்து போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2024 கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் அவர் விளையாடி வந்தார். அதன் முடிவில் அந்த தொடரில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக முன்பே அறிவித்து இருந்தார்.
தற்போது காயம் காரணமாக அந்த தொடரில் பாதியிலேயே விலகினார். அத்துடன் தான் ஒட்டுமொத்த கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவருக்கு அடுத்த மாதம் 41 வயதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளராகவும் இருக்கிறார். 2021 ஆம் ஆண்டு அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று இருந்தார்.
செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணியினருக்கு பாராட்டு விழா
கடந்த ஆண்டு முதல் அவர் பயிற்சியாளராகவும் மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராகவும், ஆப்கானிஸ்தான் அணியின் பவுலிங் ஆலோசகராகவும் அவர் செயல்பட்டு இருந்தார். இந்த நிலையில் அவர் இனி உள்ளூர் டி20 போட்டிகளிலும் விளையாடப் போவதில்லை என அறிவித்து இருக்கிறார். அதன் மூலம் ஒட்டுமொத்த கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தான் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்து இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசுகையில், “எனது மனம் விளையாட வேண்டும் என்று சொல்கிறது. ஆனால், எனது உடல் இனியும் வலி, காயம் ஆகியவற்றை தாங்க முடியாத நிலையில் உள்ளது. எனது அணியின் சக வீரர்கள் ரசிகர்கள் மற்றும் நான் ஆடும் அணிகளை எனது நிலையால் சரிவில் கொண்டு விட எனக்கு மனமில்லை. எனவே, கனத்த இதயத்துடன் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து எனது ஓய்வை அறிவிக்கிறேன். ஒரு சாம்பியன் ஆக நான் விடை பெறுகிறேன்.” என்றார்.
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் 5 கோப்பைகளை வென்று இருக்கிறார் டிவைன் பிராவோ. இதுவரை மொத்தம் 582 டி20 போட்டிகளில் விளையாடிய 631 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். அவர் ஐபிஎல், பாகிஸ்தான் சூப்பர் லீக், ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் டி20 தொடர் ஆகியவற்றில் கோப்பைகளை வென்று இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக இரண்டு முறை உலகக்கோப்பை வென்று இருக்கிறார்.
அவர் அடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருந்த இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்காக விளையாட இருந்தார். ஆனால், தற்போது காயத்தில் சிக்கியிருக்கும் நிலையில் அவர் ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்து இருக்கிறார். அவர் இனி பல்வேறு டி20 அணிகளுக்கும் பயிற்சியாளராக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.