ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஐ.சி.சி யின் உலகக்கோப்பை 2023 (ICC WORLDCUP 2023) இறுதிப் போட்டி நாளை (19.12. 2023) கோலாகலமாக நடைபெற உள்ளது. நடப்பாண்டு உலகக்கோப்பை போட்டிகளில் அசுர பலத்துடன் இந்திய அணி அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்று ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சியில் நிறுத்தி உள்ளது. இந்நிலையில் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை நம் இந்திய கிரிக்கெட் அணி எதிர்கொள்ள போகிறது. உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி நடைபெற உள்ளது.
இந்த இறுதிப் போட்டியை கோலாகலமாக கொண்டாட நான்கு வகையான நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.
முதலாவதாக இந்திய விமானப்படையினரின் வான் சாகச நிகழ்ச்சி (Airshow) இடம் பெற உள்ளது. இந்திய விமான படையின் சூரியகிரன் அக்ரோபடிக் குழு (SuryaKiran Acrobatic team) இந்த சாகச நிகழ்ச்சியை நடத்தும். 9 ஹாக் (hawk) போர் விமானங்கள் இடம்பெறும் இந்த சாகச நிகழ்ச்சியினை விமானப்படை தளபதி சித்தேஷ் கார்த்திக் தலைமையேற்று நடத்தவுள்ளார்.
Get ready for Air Show on 19th November…!
The Suryakaran Display Team is set to steal the thunder at the Cricket World Cup 2023.
Video Credit: @ImTheBaljeet #INDvAUS #Ahmedabad #CWC2023INDIA #CWC23 pic.twitter.com/USvbHNDvAP
— Adhirajsinh Jadeja AJ 🇮🇳 (@AdhirajHJadeja) November 17, 2023
இதற்கு முன் பார்த்திராத நிகழ்வாக நடைபெறும் இந்த சாகச நிகழ்ச்சி இசையுடன், புதிய இந்தியாவை பெருமைப்படுத்தும் விதமாக 10 நிமிடங்களுக்கு நடைபெற உள்ளது. கட்டணம் ஏதும் இல்லாமல் இலவசமாக இந்நிகழ்ச்சியை பார்வையாளர்கள் கண்டு களிக்கலாம்.
பிசிசிஐ (BCCI) க்கு இந்திய விமானப்படை வழங்கிய அனுமதியின் படி இந்த 9 விமானங்கள் அகமதாபாத் ஏர்போர்ட்டில் இருந்து கிளம்பி நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியம் -இல் சாகசத்தில் ஈடுபடும்.
இரண்டாவது நிகழ்ச்சியாக ஹாஃப் டைம் பரேட் நடைபெறும். பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இறுதிப் போட்டியின் இடைவெளியில் சரியாக மாலை 5.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு 15 நிமிடங்கள் இந்த பரேட் நடைபெற உள்ளது. இதுவரை உலக கோப்பையை வென்றெடுத்த கிரிக்கெட் அணிகளுக்கு கேப்டனாக விளங்கிய வீரர்களை பெருமைப்படுத்தும் விதமாக இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்திய அணிக்கு உலக கோப்பையை வென்று கொடுத்து பெருமை சேர்த்த கபில்தேவ் (1983 உலகக் கோப்பை), மகேந்திர சிங் தோனி (2011 உலகக் கோப்பை) ஆகியோரும் கௌரவிக்கப்பட உள்ளனர். இதற்கான பிரத்தியேகமாக 20 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்றும் திரையிடப்பட உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வு நம் இந்திய மண்ணில் நடைபெற உள்ளது பெருமையின் உச்சம்.
அதைத்தொடர்ந்து இந்தியாவின் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான இசையமைப்பாளர் ப்ரீத்தம் தலைமையில் பல பிரபல பாடகர்களும் 500க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்குபெறும் இசை நிகழ்ச்சியும் இடம்பெறும். நடன கலைஞர்கள் 360 ° இல் வரிசையாக நின்று நடத்தவிருக்கும் இந்த காட்சி, இந்தியாவின் பல்வேறு கலாச்சார நடனங்களுடன் ஒரு புதுவித அனுபவத்தை ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளது. பிரபல பாடல்களான தேவா தேவா, கேசாரியா, தூம் மச்சாலே, கேஸரியா தேரா இஷ்க் ஹே பியா போன்ற பாடல்கள் இடம் பெற உள்ளன.
இதன் தொடர்ச்சியாக இரண்டாம் ஆட்டத்தில் இரண்டாவது ட்ரிங்க்ஸ் ப்ரேக் டைமில் வண்ண விளக்குகளால் ஸ்டேடியம் முழுவதும் அலங்கரிக்கும் லேசர் லைட் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. லண்டனைச் சேர்ந்த LM ப்ரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனம் இந்த லேசர் நிகழ்ச்சியை நடத்தும்.30 ஆண்டுகள் உலக அளவில் பிரபலமான இந்த நிறுவனம் அதிநவீன 4D தொழில்நுட்பத்தினாலான சினிமாட்டிக் அனுபவம் அளிக்கும் வண்ணம் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து உலக கோப்பையை வெல்லும் அணியினரை வானில் இருந்து பெருமைப்படுத்தும் விதமாக 1200 ட்ரோன்கள் பயன்படுத்தியும், பட்டாசுகளால் நிறைந்த வான வேடிக்கை போன்ற வண்ண மயமான நிகழ்வுகள் நடைபெற உள்ளது.
இதுவரை எந்த ஒரு விளையாட்டு போட்டிக்கும் இது போன்றதொரு நிகழ்ச்சி நடந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. உலக கோப்பையை வெல்லும் அணியினரின் பெயரை காட்டும் விதமாக இந்த ட்ரோன் நிகழ்ச்சி அரங்கேறும். இதனைத் தொடர்ந்து ஸ்டேடியம் முழுவதும் வண்ணமயமான பட்டாசுகளால் கொண்டாடப்படும் ஃப்ளாஷ் ஆர்ட் என்னும் நிகழ்ச்சி நடைபெறும்.
இவ்வாறாக அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலகக்கோப்பை இறுதிப்போட்டி பிரம்மாண்டமாகவும் கோலாகலமாகவும் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உலக கோப்பையை வெல்லும் கிரிக்கெட் அணியின் வெற்றியாக மட்டும் இல்லாமல் நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இந்த இறுதிப் போட்டிக்கு மேலும் அழகு சேர்க்கும் வண்ணமே இத்தகைய நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. பரபரப்பான ஆட்டத்துடன் கண்களுக்கும் குளிர்ச்சி அளிக்கும் விதமாக இந்த கிரிக்கெட் போட்டி அமைய உள்ளது. இந்த போட்டியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், ரஜினிகாந்த் உள்பட பல இந்திய பிரபலங்கள் நேரில் கண்டுகளிக்கவுள்ளனர்.