Homeசெய்திகள்விளையாட்டுமுதல் டி-20 போட்டி: தென்ஆப்பிரிக்காவை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா!

முதல் டி-20 போட்டி: தென்ஆப்பிரிக்காவை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா!

-

டர்பனில் நடைபெற்ற முதல் டி-20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்று பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி-20 போட்டி நேற்று டர்பனில் நடை பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் எய்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனை அடுத்து, முதலில் விளையாடிய இந்திய அணி, அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாம்சன் 107 ரன்களும், திலக் வர்மா 33 ரன்களும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஜெரால்ட் கோட்சி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். குறிப்பாக வருண் சக்கரவர்த்தி மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோரது சுழற்பந்து வீச்சில் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இனால் 17.5 ஓவர்களில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

தென்ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக கிளாசன் 25 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றுக்கு, பூஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

MUST READ