8 அணிகள் பங்கேற்ற 9வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்றில் ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து, பிரிவில் தென்ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா முதல் 2 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு நுழைந்தன. துபாயில் நடந்த முதல் அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவையும், நியூசிலாந்து தென்ஆப்ரிக்காவையும் வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தன. நாளை மதியம் 2.30 மணிக்கு துபாயில் தொட ங்கி நடை பெறும் இறுதி போட்டியில் இந்தியா-நியூசிலாந்துபலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய அணி பேட்டிங், பவுலிங்கில் வலுவாக உள்ளது. இந்த தொடரில் 4 போட்டியிலும் வென்று தோல்வியே சந்திக்காமல் உள்ளது. கோஹ்லி (217), ஸ்ரேயாஸ் (195ரன்) மிடில் ஆர்டரில் வலுசேர்க்கின்றனர்.
கில் ஒரு சதத்துடன் 157, கே.எல். ராகுல் 3 இன்னிங்சில் (2ல் நாட்அவுட்) 106ரன் எடுத்திருக்கிறார். கேப்டன் ரோகித்சர்மா அதிரடியாக தொடங்கினாலும் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. பாண்டியா, அக்சர் பட்டேல் என நீண்ட பேட்டிங் வரிசை உள்ளது. பவுலிங்கில் ஷமி 8, வருண் சக்ரவர்த்தி 7 விக்கெட் எடுத்துள்ளனர். மெதுவான பிட்ச்சில் இந்தியா 4 ஸ்பின்னர்களுடன் களம் இறங்குவதால் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடிதான். இந்திய அணி எந்த மாற்றமும் இன்றி களம் இறங்கும் என தெரிகிறது. லீக் சுற்றில் நியூசிலாந்தை வீழ்த்தியதால் இந்தியா கூடுதல் நம்பிக்கையுடன் உள்ளது.
மறுபுறம் நியூசிலாந்து பேட்டிங்,,பவுலிங், பீல்டிங் என வலுவாக உள்ளது. ரச்சின் ரவீந்திரா 3 போட்டியில் 2 சதத்துடன் 226 ரன் எடுத்துள்ளார். வில்லியம்சன் 189 ரன் எடுத்திருக்கிறார். இந்த 2 பேரும் தான் பேட்டிங்கில் முதுகெலும்பாக உள்ளனர். இவர்களை தவிர வில்யங் 150, பிலிப்ஸ் 143 ரன் எடுத்திருக்கின்றனர். பவுலிங்கில் மாட் ஹென்றி தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான அரையிறுதியில் பீல்டிங்கின் போது தோள்பட்டையில் காயம் அடைந்தார்.
இதனால் அவர் ஆடுவாரா என்ற சந்தேகம் உள்ளது. அவர் இந்தியாவுக்கு எதிராக லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வீழ்த்தினார். தொடரில் 10 விக்கெட் எடுத்து முதல் இடத்தில் இருக்கும் அவர் ஆடாவிடில் நியூசிலாந்துக்கு பின்னடைவாக அமையும். அவருக்கு பதில் ஜேக்கப் டஃபி இடம்பெறக்கூடும். கேப்டன் சான்ட்னர் (7) , இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுப்பார். இந்தியா 3வது முறையாகவும், நியூசிலாந்து 2வது முறையாகவும் பட்டம் வெல்ல போராடும் என்பதால் சாம்பியன் மகுடம் சூடப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இதனிடையே இறுதி போட்டியில் லீக் சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய பிட்ச் தான் பயன்படுத்தப்பட உள்ளது. அந்த போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது.
இந்திய அணி: ரோகித் சர்மா(கே), கில், விராட் கோஹ்லி, ஸ்ரேயாஸ், அக்சர் பட்டேல், கே.எல்.ராகுல், பாண்டியா, ஜடேஜா, குல்தீப், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி.
நியூசிலாந்து அணி: வில்யங், ரச்சின் ரவீந்திரா, வில்லியம்சன், டேரில் மிட்செல், லாதம், பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், சான்ட்னர்(கே), மாட் ஹென்றி அல்லது ஜேக்கப் டஃபி , கைல் ஜேமீசன், வில் ஓ’ரூர்க்.