புனேவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றியுள்ளது.
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதல் முதல் 2 ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்றது. 3-வது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தது. இதனால் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்தது.
இந்த நிலையில், இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டி-20 போட்டி மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து முதலில் விளையாடிய இந்திய அணி, இங்கிலாந்தின் பந்துவீச்சை அடித்து ஆடி ரன்களை சேர்த்தனர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே ஆகியோர் தலா 53 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது. 19.4 ஓவர்களில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 15 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்மாக ஹாரி புருக் 51 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் ஹர்ஷித் ராணா, ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 3 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.