டி20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியாvsஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் உலக கோப்பை டி20 தொடர் கடந்த 2-ந் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் மோத உள்ளன. இந்த சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள்‘சூப்பர் 8’ சுற்றில் பலப்பரீட்சை நடத்த வேண்டும். அதன் பிறகு ஜூன் 24ம் தேதி அரையிறுதி ஆட்டங்களும், ஜூன் 29ம் தேதி பிரிட்ஜ்டவுனில் பைனலும் நடக்க உள்ளன. இந்தத் தொடரில் லீக் ஆட்டமானது நேற்றுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில் இன்று நடைபெறும் ’சூப்பர் 8’ சுற்றில் 43வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய அணி ரோகித் சர்மா தலைமையிலும் ஆப்கானிஸ்தான் அணியானது ரஷித் கான் தலைமையிலும் களம் காண்கின்றன. இந்த ஆட்டமானது வெஸ்ட் இண்டீஸ் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்குகிறது. இரு அணிகளும் முதலாவது சூப்பர் 8 சுற்றில் மோதும் இந்தாட்டமானது இவ்விரு அணிகளும் வெற்றி பெற கடுமையாக முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் மத்தியில் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படுகிறது.