இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஜீரோலின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்ஸில் 307 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது மற்றும் மூன்றாவது நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று முன்தினம் தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் 353 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோரூட் 122 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி துருவ் ஜீரோல் சிறப்பான ஆட்டத்தால் 307 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அணியில் அதிகபட்சமாக ஜீரோல் 90 ரன்களும் ஜெய்ஸ்வால் 73 ரன்களும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் பஷிர் 5 விக்கெட்டும், ஹார்ட்லி 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.