நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 45வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. உத்தரபிரதேசம் மாநிலம், லக்னோவில் உள்ள பாரத ரத்னா அடல் பீகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (மே 03) பிற்பகல் 03.30 மணியளவில் தொடங்கியது.
பந்து வீச்சை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்த நிலையில், லக்னோ அணியின் வீரர்கள் பேட்டிங் செய்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி, 16.2 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 89 ரன்களை எடுத்துள்ளது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி.
சென்னை அணியின் மொயீன் அலி, மாஹீஸ் தீக்சனா தலா 2 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார்.
இதனிடையே டாஸ் போடும் போது கேப்டன் தோனியிடம் வர்ணனையாளர் டேனி மாரிசன், “உங்கள் கடைசி ஐ.பி.எல். சீசனை அனுபவித்து விளையாடி வருகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த தோனி, “இது என்னுடைய கடைசி ஐ.பி.எல். என நீங்கள் தான் முடிவு செய்துள்ளீர்கள்; நான் கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, வர்ணனையாளர் தோனியிடம், நீங்கள் அடுத்த ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்பீர்கள் என்று எனக்கு தெரியும் என்று கூற மைதானத்தில் இருந்த ரசிகர்கள் சத்தமிட்டு, ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.