கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சென்னை வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
நேற்று நடைபெற்ற 22வது ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து கொல்கத்தா அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பில் சால்ட் ரன் ஏதுமின்றியும் சுனில் நரேன் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ரகுவன்ஷி 24 ரன்னிலும், ஸ்ரேயர்ஸ் அய்யர் 34 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் கொல்கத்தா அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 137 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடியது. அந்த அணி தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், நிதானமாக செயல்பட்டு வெற்றியை தன்வசமாக்கியது. கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். இறுதியாக சென்னை அணி 18வது ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி சென்னை அணிக்கு மூன்றாவது வெற்றி ஆகும்.
இந்த நிலையில், கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சென்னை வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் நான்கு ஓவர்களை வீசிய ரவீந்திர் ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் ஒரு ஓவருக்கு 4.5 எகானமி ரேட்டில் பந்துவீசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.