டெல்லி அணியை வீழ்த்திய மும்பை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது..
இன்று நடைபெற்ற 20வது ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. மும்பை அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் ஒரு வெற்றியை கூட பெறாமல் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. டெல்லி அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் 33 போட்டிகளில் சந்தித்துள்ளன. இதில் மும்பை அணி 18 வெற்றியும் டெல்லி அணி 15 வெற்றியும் பெற்றுள்ளன. இதுவரை ஒரு போட்டிகளிலும் வெற்றி பெறாத மும்பை அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இஷான் கிஷான் 42 ரன்னிலும் ரோகித் ஷர்மா 49 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் ரன் ஏதுமின்றியும் ஹர்திக் பாண்ட்யா 39 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அதிரடி காட்டிய டிம் டேவிட் 21 பந்துகளில் 41 ரன்களும் மற்றும் ரோமரியோ செப்பர்டு 10 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து அணியை 200 ரன்னை கடக்க வைத்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 234 ரன்கள் குவித்தது. பின்னர் 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய வார்னர் 10 ரன்னிலும் பிரித்வி ஷா 66 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய அபிஷேக் போரெல் 41 ரன்னில் ஆட்டமிழக்க டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 25 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 205 ரன்கள் எடுத்து 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.