சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் எம்.எஸ்.தோனி இணைந்து இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.
தல என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் எம்.எஸ்.தோனி. இவருக்கு இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவிலும் ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனான இவர் தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். கடந்த 2019ம் ஆண்டு இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து தோனியை ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே காண முடிகிறது.
இந்த நிலையில், எம்.எஸ்.தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தது இன்றுடன் 16 ஆண்டுகள் ஆகிறது. ஒரே அணியில் நீண்ட நாட்கள் பயணித்த ஒரே வீரர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார். இதேபோல் அணியில் இணைந்தது முதல் தற்போது வரை கேப்டனாக இருக்கும் ஒரே வீரர் என்ற பெருமையும் இவரையே சாரும். கடந்த 2008ம் ஆண்டு முதன் முதலில் இந்தியாவில் ஐபிஎல் தொடரை அறிமுகம் செய்தது பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.
அந்த சமயத்தில் எம்.எஸ்.தோனியை எடுக்க அனைத்து அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டிய நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியை 6 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியது. அன்று முதல் இன்று வரை சென்னையை வெற்றிகரமான அணியாக வழிநடத்தி வருகிறார் எம்.எஸ்.தோனி. அவரது தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 5 முறை கோப்பையை வென்றுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியிலும் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை தட்டிச்சென்றது குறிப்பிடதக்கது.