இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு, 171 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.
இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி மும்பையில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 235 ரன்களில் ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 82 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி ஆம் நாள் ஆட்டத்தின்போது, 59.4 ஓவர்களில் 263 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சுப்மான் கில் 90 ரன்களும், ரிஷப் பண்ட் 60 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அஜாஸ் படேல் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். முதல் இன்னிங்சில் நியூசிலாந்தை விட 28 ரன்கள் இந்திய அணி முன்னிலை பெற்றது.
இதனை தொடர்ந்து, 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி, இந்திய அணியின் மாயாஜால சுழலில் சிக்கி விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இன்றைய 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக வில் யங் 51 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
நியூசிலாந்து அணி கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே உள்ள நிலையில், அந்த அணி 143 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. இதனால் நாளைய போட்டியில் விரைந்து விக்கெட்டுகளை வீழ்த்தி, போட்டியில் ஆறுதல் வெற்றி பெற இந்திய அணி தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நடைபெற்ற முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.