2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. பாகிஸ்தான் நடத்தும் இந்தப் போட்டி பிப்ரவரி 19 முதல் தொடங்கும். சமீபத்தில், சாம்பியன்ஸ் டிராபி தொடர்பாக இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நிறைய மோதல்கள் ஏற்பட்டன. பிசிசிஐ தனது அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுத்துவிட்டது. அதே நேரத்தில், முழு போட்டியையும் பாகிஸ்தானில் நடத்துவதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பிடிவாதமாக இருந்தது. ஒரு கட்டத்தில் சாம்பியன்ஸ் டிராபியை ஹைஃப்ரிட் மாடலில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்திய அணி இனி தனது அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாடும். ஆனால் இப்போது இன்னொரு சர்ச்சை எழுந்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபிக்கான ஜெர்சியில் பாகிஸ்தானின் பெயரை எழுத இந்திய அணி மறுத்துவிட்டது. பொதுவாக போட்டியை நடத்தும் நாட்டின் பெயர் அனைத்து அணிகளின் ஜெர்சிகளிலும் இருக்கும். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் பேசுகையில்,”இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தானின் பெயரை அச்சிட பிசிசிஐ மறுத்து விட்டது. ஐ.சி.சி இதை அனுமதிக்கக்கூடாது. பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம். இந்தப் பிரச்சினையை ஐசிசிக்கு எடுத்துச் செல்ல இருக்கிறோம்” என ஆவேசப்பட்டுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு இப்போது ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே உள்ளது. ஆனால் இந்த சர்ச்சை குறித்து பிசிசிஐயிடமிருந்து இதுவரை எந்த அறிக்கையும் வரவில்லை. இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தானின் பெயரை எழுத வேண்டாம் என்று பிசிசிஐ முடிவு செய்திருந்தால், ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும். தற்போது ஜெய் ஷா ஐ.சி.சி.யின் தலைவராக உள்ளார். அவர் டிசம்பர் 1, 2024 அன்று ஐ.சி.சி தலைவராகப் பொறுப்பேற்றார். இந்நிலையில், இந்த பிரச்சினையில் ஜெய் ஷா மட்டுமே இறுதி முடிவை எடுப்பார். பிசிசிஐயின் இந்த நடவடிக்கை விதிகளுக்கு எதிரானது என்றால், ஜெய் ஷா நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்.
ஐசிசி விதிகளின்படி, ஐசிசியின் கீழ் நடைபெறும் அனைத்து போட்டிகளிலும், பங்கேற்கும் அனைத்து அணிகளும் போட்டியின் பெயரையும், போட்டியை நடத்தும் நாட்டின் பெயரையும், போட்டி நடைபெறும் ஆண்டையும் வீரர்களின் மார்பின் வலது பக்கம்எழுதுவது கட்டாயம்.2021 டி20 உலகக் கோப்பையை இந்தியா நடத்தியது. ஆனால் கொரோனா காரணமாக, முழுப் போட்டியும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது. பின்னர் பாகிஸ்தான் வீரர்களின் போட்டோஷூட்டின் சில புகைப்படங்கள் வைரலானது. அதில் போட்டியை நடத்தும் இந்தியாவின் பெயர் இல்லை. அப்போதும் கூட ஒரு பெரிய கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பின்னர், போட்டியின் போது பாகிஸ்தான் அணிந்திருந்த ஜெர்சியில் இந்தியாவின் பெயர் எழுதப்பட்டிருந்தது.