Homeசெய்திகள்விளையாட்டுஉலகக் கோப்பை செஸ் போட்டி- அரையிறுதிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா

உலகக் கோப்பை செஸ் போட்டி- அரையிறுதிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா

-

உலகக் கோப்பை செஸ் போட்டி- அரையிறுதிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா

உலகக் கோப்பை செஸ் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறிய 2வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் பிரக்ஞானந்தா.

Image

சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் உலகக் கோப்பை 2023 தொடர் அஜர்பைஜன் நாட்டின் பாகு நகரில் நடைபெற்று வருகிறது. ஓபன் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளாக நடைபெற்று வரும் சதுரங்க உலகக் கோப்பை தொடரில் ஓபன் பிரிவில் 206 போட்டியாளர்களும், மகளிர் பிரிவில் 103 வீராங்கனைகளும் பங்கேற்று விளையாடி வருகின்றனர். கடந்த ஜூலை 29-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் இந்த தொடர் தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.

உலகின் முன்னனி நட்சத்திரங்களான நம்பர் ஒன் வீரர் மேக்னஸ் கார்ல்சன், அமெரிக்காவின் ஃபேபியானோ கருவானா மற்றும் சோ வெஸ்லி, நெதர்லாந்தை சேர்ந்த அனிஷ் கிரி, சீன வீராங்கனை ஜு வெஞ்சுன், ரஷ்யாவின் அலெக்சாண்டிரா கோரியாச்சினா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் ஓபன் பிரிவில் டி குகேஷ், விதித் குஜராத்தி, அர்ஜுன் எரிகேசி, பிரக்ஞானந்தா, நிஹல் சரீன், ஸ்ரீநாத் நாராயனன், புரானிக் அபிமன்யு, அதிபன், கார்த்திக் வென்கட்ராமன், ஹர்ஷா பரதக்கோட்டி ஆகியோர், மகளிர் பிரிவில் கொனெரு ஹம்பி, ஹரிகா துரோனவள்ளி, வைஷாலி ரமேஷ் பாபு, திவ்யா தேஷ்முக், நந்திதா, கோமேஷ் மேரி, பிரியங்கா நுட்டாக்கி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

அண்மையில் குரூப் சுற்று போட்டிகள் நடந்து முடிந்திருப்பதை அடுத்து, பிரதான போட்டிகளான காலிறுதி சுற்றில் இந்திய வீரர்களான அர்ஜுன் எரிகேசி, பிரக்ஞானந்தா, விதித் சந்தோஷ் குஜராத்தி, குகேஷ் என நான்கு வீரர்கள் விளையாடினர். இதில் இந்தியாவின் முதல் நிலை வீரரான குகேஷ், உலகின் நம்பர் ஒன் வீரர் மேக்னஸ் கார்ல்சன் உடன் மோதி தோல்வியடைந்தார். விதித் சந்தோஷ் குஜராத்தி, அஜர்பைஜான் வீரரான அப்சவ் நிஜாதிடம் தோல்வியடைந்தார். அதே சமையம் நேருக்கு நேராக, இந்திய வீரர்கள் பிரக்ஞானந்தா மற்றும் அர்ஜுன் எரிகேசி மோதிக் கொண்டதில், முதல் சுற்றை அர்ஜுன் எரிகேசி வென்றார். இரண்டாவது சுற்றில் பிரக் வெற்றி பெற்று, அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்ட நிலையில், நேற்று டை பிரேக்கர் சுற்று நடைபெற்றது.

இதில் அர்ஜுன் எரிகேசியை வீழ்த்திய பிரக்ஞானந்தா, அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம் கண்டு சக இந்திய வீரர் அர்ஜுன் எரிகேசிக்கு அதிர்ச்சி அளித்தார். இதன் மூலம் சதுரங்க உலகக் கோப்பை வரலாற்றிலேயே, இந்தியாவின் முன்னணி நட்சத்திரமான விஸ்வநாதன் ஆனந்த்துக்கு பிறகு அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றார் பிரக்ஞானந்தா.

MUST READ