20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் ”சூப்பர் 8” சுற்று ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி இங்கிலாந்து அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் உலக கோப்பை டி20 தொடர் கடந்த 2-ந் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்நிலையில் நேற்று நடைபெறும் ’சூப்பர் 8’ சுற்றில் 45வது லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தென்னாப்பிரிக்கா அணி ஏய்டன் மார்க்ராம் தலைமையிலும் இங்கிலாந்து அணியானது ஜாஸ் பட்லர் தலைமையிலும் களம் கண்டன. இந்த ஆட்டமானது வெஸ்ட் இண்டீஸ் உள்ள டேரன் சம்மி மைதானத்தில் நேற்றிரவு 8 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரிஷா ஹென்ரிக்ஸ் 19 ரன்களிலும் குயிண்டன் டிகாக் 68 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ஹென்ரிச் கிளாசன் 8 ரன்களிலும் டேவிட் மில்லர் 43 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 163 ரன்கள் எடுத்து. பந்துவீச்சு தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பில் சால்ட் 11 ரன்களிலும் ஜாஸ் பட்லர் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோ 16 ரன்களிலும் மோயின் அலி 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அணியின் அதிகபட்சமாக ஹரி புரூக் 53 ரன்கள் எடுத்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 156 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து தென்னாப்பிரிக்கா அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அணியின் ஆட்டநாயகனாக குயிண்டன் டிகாக் தேர்வு செய்யப்பட்டார்.