நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் உலக கோப்பை டி20 தொடர் கடந்த 2-ந் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்தநிலையில் நேற்றிரவு (இந்திய நேரப்படி) நடைபெற்ற 38வது லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இலங்கை அணி வன்னிந்து ஹசரங்கா தலைமையிலும் நெதர்லாந்து அணியானது ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலும் களம் கண்டன. இந்த ஆட்டமானது வெஸ்ட் இண்டீஸ் உள்ள டேரன் சம்மி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்டு முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து இலங்கை அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பதும் நிசாங்கா ரன் ஏதுமின்றியும் குஷால் மெண்டிஸ் 46 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய காமிந்து மெண்டிஸ் 17 ரன்களிலும் தனஞ்செயா டி சில்வா 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் அதிரடி காட்டிய சனித் அசலங்கா 21 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது.
பின்னர் 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நெதர்லாந்து அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மைக்கேல் லெவிட் 31 ரன்களிலும் மேக்ஸ் ஒ டவுட் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய விக்ரமஜித் சிங் 7 ரன்களிலும் சைபிரண்ட் ஏஞ்சப்பிரஜித் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 16.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளயும் இழந்து 118 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் இலங்கை அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பந்துவீச்சு தரப்பில் நுவன் துஷாரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 4 ஆட்டங்களில் ஆடிய இலங்கை அணி (1 முடிவில்லாமல்) ஒரே ஒரு வெற்றியுடன் சொந்த மண்ணுக்கு திரும்பியது.