இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்குள்ள ஆடுகளத்தின் தன்மை மற்றும் வானிலையை கருத்தில் கொண்டு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக உதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டுமே இந்திய பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கவில்லை.
இதன் காரணமாக, இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மிகவும் ஏமாற்றமடைந்தார். ஆட்டம் தொடங்கிய பிறகு கடுமையாக முயன்றும் அவரால் ஸ்விங் செய்ய முடியவில்லை. இதன்பிறகு, இன்னிங்ஸின் 5வது ஓவரில், ‘எங்கிருந்தும் செய், ஸ்விங் செய்ய முடியாது’என ஷுப்மன் கில்லிடம் பும்ரா வெறுத்துப்போய் கூறியதைக் காண முடிந்தது.
பொதுவாக பிரிஸ்பேன் மைதானத்தில் வேகம், துள்ளல் காணப்படும். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆடுகளம் சிறப்பாக இருக்கும். போட்டிக்கு முன் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால், முதலில் பந்துவீசிய அணி ஆடுகளத்திலிருந்து அதிக ஸ்விங் செய்ய முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் ரோகித் சர்மா டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தார். ஆனால், முதல் 13.2 ஓவர்களில் ஆட்டம் எதிர்பார்த்தபடி அமையவில்லை.
முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப் ஆகியோர் கடுமையாக முயற்சித்தனர். ஆனால் அவர்களால் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியவில்லை. சிறப்பாக பந்துவீசிய போதிலும், ஆஸ்திரேலியாவின் தொடக்க பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து கிரீஸில் இருக்கின்றனர். உஸ்மான் கவாஜா- நாதன் மெக்ஸ்வீனி இணை விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்தனர். பும்ரா 6 ஓவர்களில் 8 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். அதில் அவர் 3 மெய்டன் ஓவர்கள் வீசினார். சிராஜ் 4 ஓவர்களில் 13 ரன்களும், ஆகாஷ் தீப் 3.2 ஓவர்களில் 2 ரன்களும் மட்டுமே கொடுத்தனர்.
ஆஸ்திரேலியாவின் சீனியர் வீரர் மேத்யூ ஹைடன் தனது கணிப்பில் அடுத்த இரண்டு நாட்கள் ஆடுகளம் பேட்டிங்கிற்கு மிகவும் நன்றாக இருக்கும். பேட்ஸ்மேன்களிடமிருந்து பெரிய இன்னிங்ஸ் கிடைக்கும். படிப்படியாக ஆடுகளத்தில் விரிசல் அதிகரிக்கும். அதன் காரணமாக சுழற்பந்து வீச்சாளர்களின் பங்கு முக்கியமானதாக மாறும்’’ எனத் தெரிவித்துள்ளார்.