கோலி கொடுத்த உற்சாகத்தால் முதல் வெற்றியை பதிவு செய்த ஆர்சிபி மகளிர் அணி
மகளிர்க்கான ஐபிஎல் போட்டி நடைபெற்று வரும் நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தன் முதல் 5 போட்டியில் தோல்வியடைந்துள்ளது. இந்த நிலையில் ஆண்கள் ஆர் சி பி அணியின் வீரரான விராட் கோலி நேற்று மகளிர் அணி வீராங்கனைகளை சந்தித்து பேசினார்.
அப்போது, “நான் 15 வருடங்களாக ஐபிஎல் விளையாடி வருகிறேன். இன்னும் நான் ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் என் உற்சாகம் குறையாது. நாம் ஐபிஎல்லில் வெற்றி பெறவில்லை என்பதே உண்மை. ஆனால் உலகின் சிறந்த ரசிகர்கள் நம்மிடம் இருப்பதாக நான் இன்னும் உணர்கிறேன். ஆர்சிபிக்காக நாம் விளையாடும் ஒவ்வொரு ஆட்டத்திலும் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும். அது ரசிகர்களுக்கு நாம் கொடுக்கும் பரிசு. ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கோப்பையை நாம் ஜெயிக்க எந்த உத்தரவாதமும் கிடையாது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் 110 சதவீத உழைப்பை நாம் கொடுக்கலாம்.
2019 ஆம் ஆண்டில் ஆர்சிபி தொடர்ந்து 6 போட்டியில் தோல்வியடைந்தது. இந்தத் தொடரில் நான் கேப்டனாக இருந்தேன். ஆட்டத்தில் பரிசளிப்பு விழா முடிந்தவுடன் நாங்கள் கெட் டூ கெதருகாக ஒன்று கூடினோம். அப்போது எனக்கு எதுவுமே தோன்றவில்லை. நான் முற்றிலும் நம்பிக்கை இழந்து இருந்தேன். அப்போது என் முன் ஏபிடி வந்தார். நானும் அவரும் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேல் சர்வதேச போட்டியில் ஆடி இருந்தோம். ஆனால் எங்களது வாழ்க்கையில் தொடர்ந்து 6 போட்டிகளை தோற்றதே கிடையாது. இதுபோல் எதிர்பாராத முடிவுகள் நமக்கு எப்போது வேண்டுமானாலும் கிடைக்கலாம். ஆனால் நம் மீதம் உள்ள வாய்ப்பை பயன்படுத்தி வெற்றிக்கான வழியை உருவாக்க வேண்டும். ஆதலால் தலை நிமிர்ந்து முகத்தில் சிரிப்புடன் விளையாட வேண்டும், ஆனால் உள்ளுக்குள் வெற்றி பெற வேண்டும் என்ற அக்னி இருக்க வேண்டும்” என உற்சாகப்படுத்தினார்.
கோலியின் அதிரடி உரையாடல் மற்றும் நம்பிக்கை வார்த்தைகளால் மகளிர்க்கான ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.