Homeசெய்திகள்விளையாட்டுநிக்கோலஸ் பூரன் அபார ஆட்டம் - ஆப்கானிஸ்தான் அணியை பந்தாடியது வெஸ்ட் இண்டீஸ் அணி!

நிக்கோலஸ் பூரன் அபார ஆட்டம் – ஆப்கானிஸ்தான் அணியை பந்தாடியது வெஸ்ட் இண்டீஸ் அணி!

-

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் உலக கோப்பை டி20 தொடர் கடந்த 2-ந் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்தநிலையில் இன்று காலை (இந்திய நேரப்படி) நடைபெற்ற 40ஆவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி ரோவ்மன் பவல் தலைமையிலும் ஆப்கானிஸ்தான் அணியானது ரஷித் கான் தலைமையிலும் களம் கண்டன. இந்த ஆட்டமானது வெஸ்ட் இண்டீஸ் உள்ள டேரன் சம்மி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதலாவது பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரண்டன் கிங் 7 ரன்களிலும் ஜான்சன் ஜார்லஸ் 43 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடிய நிக்கோலஸ் பூரன் 53 பந்துகளில் 98 ரன்கள் குவித்து ரன் அவுட் ஆனார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 218 ரன்கள் குவித்தது.

பின்னர் 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மெகா இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரமனுல்லா குர்பாஸ் ரன் ஏதுமின்றியும் இப்ராஹிம் சட்ரன் 38 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய குல்பதின் நைப் 7 ரன்களிலும் அஸ்மதுல்லா ஒமர்சாய் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பந்துவீச்சு தரப்பில் ஒபட் மெக்கொய் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆட்டநாயகனாக நிக்கோலஸ் பூரன் தேர்வு செய்யப்பட்டார்.

 

MUST READ