இந்திய அணியின் ஜாம்பவான்களான விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் உலகின் மிகவும் வெற்றிகரமான வீரர்களாகக் கருதப்படுகின்றனர்.
இந்த இரண்டு வீரர்களும் இந்தியாவுக்காக பல பெரிய போட்டிகளில் தனித்து நின்று வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளனர். இந்த முறையும், ரோஹித் சர்மாவின் தலைமையில், இந்திய அணி மற்றொரு ஐசிசி போட்டியின் இறுதிப் போட்டியை எட்டியுள்ளது. இதில் விராட் கோலியின் பேட்டிங்கும் முக்கிய பங்களிப்பை அளிக்கிறது. இந்த இரண்டு வீரர்கள் குறித்தும் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் ஒரு முக்கியத்தகவலை வெளியிட்டுள்ளார்.
யுவராஜ் சிங்கின் தந்தையும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான யோகராஜ் சிங், இதுகுறித்து, ”ரோஹித் மற்றும் விராட் ஆகியோர் இந்திய அணிக்கு வந்தபோது, யுவராஜ் சிங் அவர்களை ஒரு மூத்த சகோதரர் போல கவனித்துக் கொண்டார். என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார். அவர்கள் இருவரும் நாட்டிற்கு மிகுந்த பெருமையை தேடித் தந்துள்ளனர். இந்திய அணியின் டிரஸ்ஸிங் அறையில் நல்ல சூழலை எப்படி பராமரிப்பது, எதிரிகளை கூட எப்படி அரவணைப்பது என்பதை யுவராஜிடமிருந்து விராட்டும், ரோஹித்தும் கற்றுக்கொண்டனர். அவர்கள் ஜூனியர்களாக இருந்தபோது யுவராஜுடன் நெருக்கமாக இருந்தனர். அவர்களுடைய மூத்த சகோதரரைப் போன்றனர் யுவராஜ் சிங்.
ரோஹித் சர்மாவும், விராட் கோலியும், யுவராஜ் சிங்குடன் நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளனர். விராட் கோலி, யுவராஜ் சிங்குடன் 3 டெஸ்ட், 64 ஒருநாள் மற்றும் 33 டி20 போட்டிகள் உட்பட சுமார் 100 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். ரோஹித் சர்மா 115 சர்வதேச போட்டிகளில் யுவராஜுடன் டிரஸ்ஸிங் ரூமைப் பகிர்ந்து கொண்டார். இது தவிர, ரோஹித், விராட் ஆகியோருக்கு ஐபிஎல்லில் யுவராஜ் சிங்குடன் விளையாட வாய்ப்பு கிடைத்தது. யுவராஜ் தனது கடைசி சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். முன்னதாக, அவர் 2014 ஆம் ஆண்டு விராட் கோலியுடன் ஆர்சிபி அணிக்காக விளையாடினார்.
ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர். இந்நிலையில், அவர்களுக்கு மற்றொரு ஐ.சி.சி போட்டியை வெல்ல ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது. 2025 சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டி மார்ச் 9 ஆம் தேதி இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த இரண்டு வீரர்களும் இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு தங்கள் அணியை சாம்பியனாக்குவதில் கவனம் செலுத்துவார்கள்.