Homeசெய்திகள்திருநின்றவூரில் மழை நின்றாலும் துயரங்கள் நீங்கவில்லை; நீரில் மூழ்கிய 2000 வீடுகள் - துணை முதல்வர்...

திருநின்றவூரில் மழை நின்றாலும் துயரங்கள் நீங்கவில்லை; நீரில் மூழ்கிய 2000 வீடுகள் – துணை முதல்வர் நேரில் ஆறுதல்

-

- Advertisement -

திருநின்றவூரில் மழை நின்றாலும் துயரங்கள் போகவில்லை;  2000 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதை துணை முதல்வர் உதயநிதி நேரில் பார்த்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

ஆவடி அடுத்த திருநின்றவூர் நகராட்சி, 14, 15, 16, 17 வது வார்டுகளில் உள்ள பெரியார் நகர், முத்தமிழ் நகர், கன்னிகாபுரம் மற்றும் சுதேசி நகரில் 2500 வீடுகள் உள்ளன. இங்கு, ஒவ்வொரு ஆண்டும் மழையால் திருநின்றவூர் ஈசா ஏரி நிரம்பி குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் போது உருவான மிக்ஜாம் புயலால், டிச. 4, 5 தேதிகளில் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 57 செ.மீ., மழை பெய்தது. இதன் காரணமாக மேற்கூறிய குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்து, முட்டிவரை தண்ணீர் தேங்கி பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ராட்சத மோட்டார்கள் வாயிலாக, தண்ணீரை வெளியேற்ற வழிவகை செய்தனர்.

அதேபோல், திருநின்றவூர் நகராட்சி, 21, 27 வார்டில் இந்திரா நகரில் 2000 வீடுகள் உள்ளன. இந்த பகுதியும் ஒவ்வொரு மழைக்கும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு குடியிருப்பை சுற்றி 5 அடிக்கு மேல் வெள்ளம் தேங்கி நிற்கும் நிலை உள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்து மழையில் அன்னை இந்திரா நகர் மற்றும் மேற்கூறிய பகுதியில் குடியிருப்பைச் சுற்றி தண்ணீர் தேங்கி பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

இந்திரா நகரில் மட்டும் சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம், அனெக்ஸ் 3, 7 ல் பகுதிகளில் ‘பொக்லைன்’ இயந்திரம் வாயிலாக மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர். திருநின்றவூர் நகராட்சியை பொறுத்தவரை பல மாதங்களாக நிரந்தர நகராட்சி கமிஷனர் மற்றும் போதிய அதிகாரிகள் இல்லாததால், மழை வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் இன்னும் துவங்கவில்லை என வார்டு உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இந்த ஆண்டு திருநின்றவூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் உள்ள மழைநீர் வடிகால் மட்டும் 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன. இதை தவிர, மழைக்காலத்தில் குடியிருப்புகளில் தேங்கும் மழை நீரை வெளியேற்ற 3.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்திரா நகரில் 1866 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் மற்றும் இந்திரா நகர் முதல் நெமிலிச்சேரி கால்வாய் வரை 926 மீட்டர் நீளத்திற்கு அமைக்கும் பணிக்கு விரிவான திட்ட அறிக்கைகள் அனுமதி பெற அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் இன்னும் துவங்காததால், இந்த மழைக்கும் திருநின்றவூர் நகராட்சி பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று காலையில் திடீரென்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருநின்றவூர் பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த மழைநீரை அகற்றும் பணியை பார்வையிட்டார். பின்னர் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இது குறித்து வார்டு உறுப்பினர் ஒருவர் கூறுகையில்..

மற்ற உள்ளாட்சி பகுதிகளில், கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பை கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருநின்றவூர் நகராட்சியில், நிரந்தர அதிகாரிகள் இல்லாததால் பணிகள் திட்டமிடுவது மற்றும் செயல்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 835 ஏக்கர் கொண்ட திருநின்றவூர் ஈசா எரியும் 70 ஆண்டுகளாக தூர் வாராமல் உள்ளன.இதனால் சாதாரண மழைக்கே தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

MUST READ