அரியலூர் மாவட்டத்தில் 1,000 கோடி செலவில் தைவானைச் சேர்ந்த காலணி உற்பத்தி நிறுவனமான “டீன் ஷூஸ்” ஆலைக்கு நவம்பர் 15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
தமிழகத்திற்கு அதிகளவில் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி தமிழ்நாடு முதலமைச்சர் சிகாகோ சென்றிருந்தபோது அரியலூர் மாவட்டத்தில் டீன் ஷூஸ் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் நவம்பர் 15ம் தேதி டீன் ஷூஸ் நிறுவனத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளார்
மேலும், அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த மகிமைபுரம் கிராம பகுதியில் 130 ஏக்கர் பரப்பளவில் உள்ள சிப்காட் தொழில்வளாகத்தில், தைவான் நாட்டை சேர்ந்த டீன் ஷூஸ் குழுமத்தின் துணை நிறுவனமான ப்ரீ டிரெண்ட் இன்டஸ்ட்ரியல் இந்தியா பிரைவேட் லிமிடெட் சார்பில் ரூ.1000 கோடி முதலீட்டில் தொழிற்சாலை அமைய உள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உலகப்புகழ் பெற்ற காலணி தொழிற்சாலைகள் அமைவது ஏற்றுமதியை அதிகரிப்பதுடன், அங்குள்ள இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொழிற்சாலை மூலம் 15,000 பேருக்கு வேலை கிடைக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.