பலவற்றில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்ற செய்தி வரும் போது அது தமிழர்களுக்கு பெருமை தந்திருக்கிறது . ஆனால், இதில் தமிழகம் முதலிடம் என்று சொல்லும்போது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
சாக்கடை மற்றும் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது என்கிறது அந்த அதிர்ச்சி செய்தி. இது குறித்து தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, ‘’சாக்கடை மற்றும் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலம், சமூக நீதி, கல்வியறிவு பெற்ற மாநிலம் என்றெல்லாம் மார்தட்டி பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழகத்தில் இந்த இழிநிலை உள்ளது. இதில் திராவிட மாடல் அரசு என்ற பெருமை வேறு’’ என்று ஆத்திரப்பட்டிருக்கிறார் .
சாக்கடை மற்றும் கழிவு நீர் தொட்டியை மனிதர்கள் சுத்தம் செய்யக்கூடாது. இயந்திரங்கள் மூலம் மட்டுமே சுத்தம் செய்யப்பட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தாலும் சாக்கடை மற்றும் கழிவு நீர் தொட்டிகளை மனிதனாக சுத்தம் செய்யும் அவலம் இருக்கிறது. அப்படி சுத்தம் செய்யும் போது உயிர் இழப்புகள் நேரும் கொடுமையும் இருக்கிறது. இதைத்தான் நாராயணனும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.