பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க உள்ள தமிழக வீரர்கள் , வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் ரூ.5.99 நிதிக்கான காசோலையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
மலேசியா தலைநகர் கோலாலம்பூர் நடைபெறவுள்ள 10-வது ஆசிய பசிபிக் காது கேளாதோர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 11 விளையாட்டு வீரர், வீராங்கணைகள் பங்கேற்கின்றனர். இந்த நிலையில் மாணவர்களுக்கு போட்டிக்கான மொத்தத் தொகை ரூ.2.20 லட்சத்திற்கான காசோலையை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இதேபோல், தென்கொரியாவில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான வாள்வீச்சு விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள உள்ள வாள்வீச்சு வீராங்கணை பி. சசிபிரபாவுக்கு, விமான கட்டணம், தங்கும் இடம் செலவினம் மற்றும் போட்டிக்கான நுழைவு கட்டணத்திற்க்கான தொகை ரூ. 2 லட்சத்துக்கான காசோலையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இதேபோல், எகிப்தில் நடைபெறும் பாரா பேட்மிட்டன் சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளும் பாரா பேட்மிட்டன் வீரர் டி. ஜெகதீஸ்டில்லிக்கு, விமான கட்டணம், தங்கும் இடம் செலவினம் மற்றும் போட்டிக்கான நுழைவு கட்டணத்திற்க்கான தொகை ரூ. 1.79 லட்சத்துக்கான காசோலையை துணை முதலமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.