Homeசெய்திகள்தமிழ்நாடுசிறைகளில் உள்ள 84 ரவுடிகளை 396 வழக்கறிஞர்கள் 1987 முறை சந்தித்துள்ளனர்- வழக்கறிஞர்கள் மத்தியில் விவாதமாக...

சிறைகளில் உள்ள 84 ரவுடிகளை 396 வழக்கறிஞர்கள் 1987 முறை சந்தித்துள்ளனர்- வழக்கறிஞர்கள் மத்தியில் விவாதமாக மாறிய டிஜிபி அறிக்கை

-

தமிழ்நாடு சிறைகளில் உள்ள 84 ரவுடிகளை 396 வழக்கறிஞர்கள் 1987 முறை சந்தித்துள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். அந்த அறிக்கை வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

சிறைகளில் உள்ள கைதிகளை சந்திக்கும் வழக்கறிஞர்கள் கட்டப்பஞ்சாயத்து, சதியில் ஈடுபடுவதாக டிஜிபி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 84 ரவுடிகளை 396 வழக்கறிஞர்கள், 1987 முறை சந்தித்துள்ளனர். வழக்கு தொடர்பாக கைதிகளை வழக்கறிஞர்கள் சந்தித்தாலும், சிலரின் நடவடிக்கைகள் சந்தேகப்படும்படியாக உள்ளதால் வக்காலத்தில் குறிப்பிட்டுள்ள வழக்கறிஞர்களை மட்டும் கைதிகளை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என டிஜிபி சங்கர் ஜிவால் காவல்துறை அதிகாரிகளுக்கு சுற்றிக்கை அனுப்பி இருந்தார்.

வழக்கறிஞர்களுக்கு எதிராக பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டுகளை கூறி வெளியிட்டுள்ள இந்த சுற்றிக்கையை திரும்ப பெற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் கிருஷ்ணகுமார் தமிழக டிஜிபிக்கு அனுப்பிய கடிதத்தில், வழக்கறிஞர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், வழக்கறிஞர்கள் அடிப்படை உரிமையை பாதிக்க செய்யும் வகையிலும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

கட்சிகாரர்களை சந்திக்க வழக்கறிஞர்களுக்கு உரிமை உள்ளது. அந்த உரிமையை பறிக்கும் வகையில் காவல்துறை செயல்படுவது நீதிபரிபாலனத்திற்கும் எதிரானது என குறிப்பிட்டுள்ளனர்.

ஒட்டு மொத்த வழக்கறிஞர் சமுதாயத்தையும் சந்தேக கண்ணோட்டத்துடன் காவல்துறை அணுகினால் அது நீதித்துறை மீதான நம்பகத்தன்மையை இழக்க செய்யும் எனவும் தெரிவித்துள்ளனர்.

சிறையில் கைதிகளை சந்திக்கும் வழக்கறிஞர்கள் கட்டப்பஞ்சாயத்து, சதி திட்டத்தில் ஈடுப்படுவதாக குற்றம்சாட்டி டிஜிபி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்திள்ளனர்.

MUST READ