தமிழ்நாட்டில் 46 ஆயிரம் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 14 புதிய முதலீட்டு திட்டங்களுக்கு 38 ஆயிரத்து 698 கோடி ரூபாய் முதலீட்டிற்கான ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்புதல்கள் மூலமாக 46 ஆயிரத்து 931 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
மின்னணு துறை சார்ந்த பிரிண்டட் சர்க்யூட் போர்ட்ஸ்,குறைந்த மின்னழுத்த பேனல்கள், மொபைல் போன் உதிரி பாகங்கள் மற்றும் உறை தயாரித்தல், உயர்தொழுநுட்ப உபகரணங்கள் மற்றும் அதற்கான மென்பொருட்கள், பாதுகாப்புத்துறை மற்றும் மருத்துவத்துறை மருந்து பொருட்கள் தயாரிப்பு, தோல் அல்லாத காலணிகள் தயாரிப்பு, எரிசக்தி துறை மற்றும் மின் வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடுகள் வரப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டார்ஸ் ஒன்பதாயிரம் கோடி முதலீட்டில் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஃபாக்ஸ்கான் குழுமத்தின் துணை நிறுவனமான 13 ஆயிரத்து 180 கோடி முதலீட்டில் ஏறத்தாழ 14 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கக் கூடிய வகையில் தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, ராமநாதபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் பி எஸ் ஜி குடும்பத்தின் துணை நிறுவனம் சார்பில் 10 ஆயிரத்து 375 கோடி முதலீட்டில் 3000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க கூடிய வகையில் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் தைவான் நாட்டைச் சேர்ந்த ஃப்ரீ ட்ரெண்டிங் இண்டஸ்ட்ரியல் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் 15000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கக்கூடிய வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கேன்ஸ் சர்க்யூட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் 1395 கோடி ரூபாய் முதலீட்டில் 1033 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஹசன் சர்க்யூட் பிரைவேட் லிமிடெட் சார்பில் 612 கோடி முதலீட்டில் 1200 பேருக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கக்கூடிய முதலீடுகள் வரப்பட்டுள்ளது.இவ்வளவு முதலீடுகளுக்கு நடைபெற்று முடிந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் அமெரிக்க பயணம் மற்றும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கிடைக்கப் பெற்று இருக்க கூடிய தொழில் முதலீடுகள் மூலமாக என மொத்தமாக 46 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கக் கூடிய வகையில் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம்.
தமிழ்நாட்டில் படித்தவர்களுடைய எண்ணிக்கை அதிகமாக உள்ளது எனவே அதற்கு ஏற்ப வேலை வாய்ப்புகளை தொடர்ந்து அதிகப்படுத்தும் பணியை செய்து வருகிறோம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.