தமிழகத்தில் இன்று 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேலாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் சுட்டெரித்தது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மதுரை, சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேலாக வெப்பநிலை பதிவாகி வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை மையம் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக வெப்ப நிலை பதிவாகும் என தெரிவித்திருந்தது. அதன்படி, இன்று தமிழகத்தில் 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேலாக வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் வாட்டி வதைத்தது. அடுத்தபடியாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், பாளையங்கோட்டையில் தலா 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் கொளுத்தியது. இதேபோல், திருச்சி, ஈரோடு, கரூர் பரமத்தி, பரங்கிப்பேட்டை மற்றும் சென்னையில் தலா 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. கடலூரிலும் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் சுட்டெரித்தது.