இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் தஞ்சை பெரியகோவில் ஒன்றாகும். தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாக அமைந்துள்ளது. பொ. ஊ. 10-ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற தமிழ் சோழ பேரரசர் முதலாம் ராஜராஜ சோழன் இக்கோயிலைக் கட்டுவித்தார்.
தஞ்சை பெரியகோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த நாள் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம். அதனால் தான் மாமன்னன் பிறந்தநாளான சதய நட்சத்திர நாளில் ஆண்டு தோரும் சதய விழாவாக தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் 2 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி இந்தாண்டு 1039வது சதய விழா சனிக்கிழமை (நேற்று) தொடங்கியது.நேற்று காலை 8.30 மணிக்கு மங்கல இசையுடன் தொடங்கி. சதய விழா குழு தலைவர் து.செல்வம் வரவேற்று, ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தொடக்க உரை நிகழ்த்தி உள்ளார். பழநி ஆதீனம் குருமகா சன்னிதானம் சாது சண்முக அடிகளார் அருளுரை வழங்கி உள்ளார்.
அதனை தொடர்ந்து கருத்தரங்கம், நாத சங்கமம், 1,039 பேர் பங்கேற்கும் பரத நாட்டியம், கவியரங்கம், பட்டிமன்றம், ‘சதய நாயகன் ராஜராஜன்’ வரலாற்று நாடகம் நடைபெற்றன. இன்று காலை கோயில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்குதல், மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்தல், திருமுறை பண்ணுடன் 100-க்கும் அதிகமான ஓதுவாமூர்த்திகளுடன் ராஜ வீதிகளில் வீதியுலா, பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேராபிஷேகம் நடைபெற்றது. மாலையில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன் வீதியுலா நிகழ்ந்தது.
பின்னர் விருது வழங்கும் விழாவில் கவிஞர் வைரமுத்து, குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் சிறப்புரை ஆற்றினர்.
கவிஞர் வைரமுத்து பேசியபோது , ஒன்றிய அரசு தொல்லியல் துறைக்கு ஒரு கோரிக்கை வைத்தார். அதில் ராஜராஜ பெருமன்னன் சிலையை நீங்கள் கோயில் வளாகத்துக்குள் வைக்க வேண்டும் என்றார்.
2 நாட்கள் நடைபெற்ற சதய விழாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர்.