ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 17 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால், அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 5000 கன அடியாக இருந்தது. நேற்று நீர்வரத்து வினாடிக்கு 6000 கன அடியாக அதிகரித்தது. இதனிடையே, காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதால், ஒகேனக்கலுக்கு நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 8000 கன அடியாக இருந்தது. இது காலை 9 மணி நிலவரப்படி மேலும் அதிகரித்து 10 ஆயிரம் கன அடியாக வரத்தானது. இன்று மாலை நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 17 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி சிறிய அருவி, மெயின் அருவி, ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் அருவிகளில் மற்றும் ஆற்றுப் பகுதிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்