காரைக்காலில் 144 தடை உத்தரவு! பெண் தாதாவின் செயலால் அச்சம்
காரைக்கால் அடுத்த நிரவி தொழிலதிபர் சிவகாளிமுத்து என்பவருக்கு, பெண் தாதா எழிலரசி கூலிப்படையினரால் கொலை மிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து, அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் கூலிப்படை நடமாட்டம் இன்றி இருந்த நிலையில், தற்போது மீண்டும் கூலிப்படையினர் அச்சுறுத்தல் மற்றும் நடமாட்டம் துவங்கியுள்ளதால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. பிரபல பெண்தாதா எழிலரசி கடந்த 2019ம் ஆண்டு வாஞ்சூர் பகுதியில் உள்ள மறைந்த சாராய வியாபாரி ராமு மற்றும் சிவகாளிமுத்து ஆகியோருக்கு சொந்தமான மதுபான விடுதியை கூலிப்படையினர் கொண்டு தாக்குதல் நடத்தியது. இது தொடர்பாக தொழிலதிபர் சிவகாளிமுத்து, கடந்த 2020ம் ஆண்டு திருப்பட்டினம் காவல் நிலையத்தில் அளித்த புகார் மீது வழக்கு பதிவு செய்த திருப்பட்டினம் போலீசார் தலைமறைவாக இருந்த எழிலரசியை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிரவி- திருப்பட்டினம் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்ய வந்த போது போலீசார் மடக்கி கைது செய்தனர்.அந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக அமைதியாக எழிலரசி இருந்தார்.
தற்போது கூலிப்படையினர் மூலம் தனக்கு எழிலரசி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக நிரவி காவல்நிலையத்தில் சிவகாளிமுத்து புகார் தெரிவித்தார். இதையடுத்து நிரவி 2வது சாலையில் உள்ள சிவகாளிமுத்து வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் இருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் எழிலரசி காரைக்காலுக்குள் நுழைய தடை விதித்து, நிரவி போலீஸ் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.